தினகரன் 10.11.2010
பிளாஸ்டிக் கப்பில் சூடாக சாப்பிட்டால் புற்றுநோய் தாக்கும் அபாயம் மாநகராட்சி எச்சரிக்கை நோட்டீஸ்
சேலம், நவ.10: பிளாஸ்டிக் கப்பில் சூடாக சாப்பிட்டால் புற்று நோய் ஏற்படும் என்பதால் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தவிர்க்க வேண்டும் என சேலம் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்களை மக்களிடம் வழங்கி வருகிறது.
சேலத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என விழிப்புணர்வு பேரணி கடந்த 1ம் தேதி சேலத்தில் நடத்தப்பட்டது. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் ‘நமது நலம், நமது கைகளில்…’ என விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்படுகிறது. அதில், வீடு மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் போது துணி பைகளையே பயன்படுத்த வேண்டும் என அந்த விழிப்புணர்வு நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பிளாஸ்டிக் பொருட்களில் சூடான பானங்களை குடிக்கும்போது அதில் வேதியியல் மாற்றங்கள் ஏற்படும். அதனால் புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்திய பிறகு அவற்றை வெளியே போடுவதால் சுற்றுப்புறமும் மாசுபடுகிறது. தொற்று நோயும் பரவுகிறது. எனவே, சூடான பானங்களை பருக காகித கப்புகள், பீங்கான் ஆகியவற்றை பயன்படுத்துவோம். பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வோம். இவ்வாறு அந்த நோட்டீசில் மாநகராட்சி மேயர் ரேகாபிரியதர்ஷினி, ஆணையர் பழனிசாமி, துணை மேயர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.