பிளாஸ்டிக் கழிவைச் சேகரிக்க வீட்டுக்கு ஒரு பை!
கோபியில் பிளாஸ்டிக் கழிவைச் சேகரிக்க வீட்டுக்கு ஒரு பை வழங்கும் திட்டத்தை, கோபி நகராட்சித் தலைவர் ரேவதிதேவி வெள்ளிக்கிழமை துவக்கி வைத்தார்.
கோபி நகராட்சியில் 40 மைக்ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள், அனைத்து வகையான பிளாஸ்டிக் டம்பர்கள் விற்கவும், உபயோகிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையும் மீறி உபயோகிப்போருக்கு ரூ.100-ம், பயன்படுத்தும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.1,000-ம், மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.2,000, தயாரிப்பாளர்களுக்கு ரூ.5,000-ம் அபராதமாக விதிக்கப்படுகிறது.
தொடர்ந்து மூன்று முறை அபராதம் விதிக்கப்பட்டால் வியாபார உரிமம் ரத்து செய்யப்பட்டு வழக்கும் பதியப்படுகிறது. 40 மைக்ரான் அளவுக்கும் குறைவான பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன்படி, நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் ஸ்பான்சர் மூலமாக பை வழங்கப்பட்டு அதில் பிளாஸ்டிக் கழிவைப் போட்டு வைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 6, 11, 20-ஆவது வார்டுகளில் 1,700 பைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, நகராட்சித் தலைவர் ரேவதிதேவி கூறியது:
பசுமை நகரமான கோபி நகராட்சியில் பிளாஸ்டிக் பை ஒழிப்பில் தீவிரமாக உள்ளோம். குப்பையோடு பிளாஸ்டிக் கழிவு சேர்வதால் குப்பை மட்குவதில்லை. இதனால், பிளாஸ்டிக் கழிவை தனியாக வைப்பதற்காக, ஒவ்வொரு வீடுக்கும் பை வழங்குகிறோம். சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவு சாலை அமைக்கப் பயன்படும் என்றார்.
நகராட்சி ஆணையாளர் ஜான்சன், சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார், தமிழ்ச்செல்வன், சையதுகாதர் உள்பட பலர் பங்கேற்றனர்.