தினமணி 14.09.2010
பிளாஸ்டிக் குப்பை: மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு
மதுரை, செப்.13: மதுரை மேலவாசல் வீட்டுவசதி வாரிய குடியிருப்புக் காலியிடத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளது தொடர்பான நடவடிக்கை குறித்து, மதுரை மாநகராட்சி ஆணையர், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மதுரைப் பொறியாளர் பதிலளிக்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மேலவாசல் பகுதியில் பிளாஸ்டிக் குப்பைக் கழிவுகள் ஆபத்துக்கு வழிகோலும் வகையில் குவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, ஒரு நாளிதழில் செய்தி வெளியானது. இதை உயர் நீதிமன்றம் தானே முன் வந்து வழக்காக எடுத்துக்கொண்டது.
இதுதொடர்பாக, பதிவாளர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதிகள் டி.முருகேசன், எஸ்.நாகமுத்து ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், மதுரை மாநகராட்சி ஆணையரும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியப் பொறியாளரும் நாளிதழில் செய்தி வந்தது தொடர்பாக, எடுக்கப்பட்ட அல்லது எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது..