தினமணி 29.11.2013
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி தீவிரம்
தினமணி 29.11.2013
பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யும் பணி தீவிரம்
திருவள்ளூர் நகராட்சியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதனால் பாதிக்கப்படும் வியாபாரிகள், மூலக்காரணமான பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் நிறுவனங்களை
தடை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் ஒழிக்க வேண்டும்
என மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய
அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து அனைத்துக்
கூட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தி வருகிறார். அவர் செல்லும்
இடங்களிலும் சாலையோரக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பைகளை
பறிமுதல் செய்தும் வருகிறார். மேலும் திருவள்ளூர் நகராட்சியில் சுகாதார
அலுவலர் மோகன், சுகாதார ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் கடைகளுக்குச் சென்று
அவ்வப்போது பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் வியாழக்கிழமை காலையில் சைக்கிளில் பிளாஸ்டிக் பைகளை எடுத்துச்
சென்று சாலையோரக் கடைகளுக்கு விநியோகிக்கும் நபரிடமிருந்த பிளாஸ்டிக் பைகளை
பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.இதனைத்தொடர்ந்து திருவள்ளூர் பஜார்
வீதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டு, 200 கிலோ வரை பிளாஸ்டிக் பைகளை
பறிமுதல் செய்து ரூ.3 ஆயிரத்து 500 வரை அபராதம் விதித்தனர்.
இதுகுறித்து நகராட்சி சுகாதார அலுவலர் மோகன் கூறியது: மாவட்ட ஆட்சியர்
உத்தரவின்படி, நகராட்சி ஆணையர் மேற்பார்வையில் திருவள்ளூர் நகராட்சிக்கு
உள்பட்ட பகுதிகளில் அவ்வப்போது ஆய்வு செய்து பிளாஸ்டிக் பைகளை பறிமுதல்
செய்து அபராதம் விதிக்கின்றோம். அந்த அபராத தொகைக்கேற்ப, திருவள்ளூர்
நகராட்சி நிர்வாகம் சார்பில் அச்சிடப்பட்ட துணிப்பைகளை வியாபாரிகளிடம்
வழங்குகிறோம். சிறிய பை ரூ. 10, பெரிய பை ரூ.15 எனக் கணக்கிட்டு
வியாபாரிகளுக்கு வழங்குகிறோம்.
இந்த ஆண்டு மட்டும், இதுவரை 5 டன் வரை பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழித்துள்ளோம் என்றார்.
வியாபாரிகள் கோரிக்கை: மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு
ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் பிளாஸ்டிக் பைகளையே அதிகளவில் கேட்டு
வாங்குகின்றனர்.
ஒரு வியாபாரி பிளாஸ்டிக் பை விற்பனையை நிறுத்தினால் மற்றொரு வியாபாரி ரகசியமாக விற்பனை செய்கிறார்.
இதனைப் பார்க்கும் மற்ற வியாபாரிகளும் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்யத் தொடங்கி விடுகின்றனர்.
இதற்கு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டுமெனில், திருவள்ளூர் மாவட்டத்தில்
உள்ள சிப்காட் பகுதிகளில் ஆய்வு செய்து அங்கு பிளாஸ்டிக் பைகளைத்
தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க
வேண்டும். மேலும் இம்மாவட்டத்துக்குள் பிளாஸ்டிக் பைகளை ஏற்றி வரும்
வாகனங்களை கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும்.
இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்தால் திருவள்ளூர் பஜாரில் பிளாஸ்டிக் பைகள் முற்றிலுமாக ஒழியும் என்றனர்.