தினமலர் 01.08.2012
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அதிரடி திட்டம்
திருப்பூர் : “தடை ய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, கடைகளில் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு , மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து தவறு செய்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,’ என, ஒவ்வொரு கடைக்கும் நோட்டீஸ் வினியோகிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளொன்றுக்கு 550 மெட்ரிக் டன் குப்பை உருவாகிறது. அவற்றில், 500 டன் அளவுக்கு சேகரிக்கப்படுகிறது. இதில், பெரும்பாலானவை பிளாஸ்டிக் கழிவுகளாகவே உள்ளன. அதனால், ஒருமுறைக்கு மேல் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்கிறது.
அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை இல்லாததால் எல்லை மீறியும் செல்கிறது. “டாஸ்மாக்’ மதுக்கடை பார்களில் பிளாஸ்டிக் டம்ளர்கள் பயன்படுத்தப்படுகின்றன. டீக்கடைகளில் பார்சல் டீ, பிளாஸ்டிக்கவரில் வழங்கும் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஓட்டல்களில் சாம்பார், சட்னி வகைகள் பிளாஸ்டிக் கவரில் வழங்கப்படுகிறது. சிறிய உணவகங்கள், மெஸ்களில் உணவு பொட்டலங்கள்பார்சல் செய்ய, இலைகள் பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய கழிவுகளை குப்பையில் வீசுவதோடு, சாக்கடை கால்வாயிலும் கொட்டுகின்றனர். அவை அடைத்துக் கொள்வதால், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை மீண்டும் தடை செய்து உத்தரவிட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக, மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு தயாரித்துள்ள நோட்டீஸ்:
உணவுப்பொருள் விற்பனை செய்யும் உங்களுக்கு சொந்தமான கடையில்,
மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப்களில் சூடான உணவுப் பொருட்களை அடைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்களுக்கும், பொது சுகாதாரத்துக்கும்குந்தகம் ஏற்படும்; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகி, தொற்று மற்றும் தொற்றா நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நோட்டீஸ் கிடைத்த மூன்று நாட்களுக்குள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதில்லை எனமாநகராட்சிக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அப்பொருட்களை பறிமுதல் செய்வதுடன், பிளாஸ்டிக் கழிவு (மேலாண்மை மற்றும் கையாள்தல்) விதி 2011ன்படி, அபராதத் தொகை வசூலிக்கப்படும். தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படியும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.