மாலை மலர் 27.08.2009
புகை பிடிப்பதை கைவிடுங்கள்: சென்னையை புகையில்லா நகரமாக மாற்றுவோம்– கருத்தரங்கில் மேயர் பேச்சு

சென்னை, ஆக.27-
புகையில்லா சென்னை அமைப்பு சார்பில் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கான கருத்தரங்கம் சென்னையில் இன்று நடந்தது. கருத்தரங்கில் புகையில்லா சென்னை என்ற இலக்கினை 2010-ம் ஆண்டுக்குள் எட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
கருத்தரங்கிற்கு தலைமைதாங்கி மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
பொதுமக்களை புகைப்பழக்கத்தில் இருந்து விடுவிக்ககவுன்சிலர்கள் விழிப்புணர்வு பணியை மேற்கொள்ள வேண்டும். பீடி, சிகரெட் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் அதே பாதிப்பு, பக்கத்தில் நிற்பவர்களுக்கும் ஏற்படுகிறது. சாதாரண பொதுமக்களை காக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
புகைப்பது என்பது தனக்குத்தானே கொள்ளி போட்டுக்கொள்வது போன்றதாகும். புகையில்லா சென்னையை உருவாக்கியே தீரவேண்டும். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
பொது இடங்களில் புகைபிடிப்பது தண்டனைக் குரிய குற்றம் என்று கடந்த ஆண்டு மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இந்தசட்டத்தின் கீழ் சென்னையில் இதுவரை ரூ.1 1/2 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
எந்ததிட்டத்திற்கும் தீர்மானம் மட்டும் போதாது. மக்கள் ஒத்துழைப்பு வேண்டும். சென்னையில் ஏற்கனவே பள்ளிக்கூடங்களில் இருந்து 100 மீட்டர் இடைவெளியில் புகையிலைப்பொருட்கள் விற்பதற்குதடை அமுலில் உள்ளது. ஒரு சிகரெட் பிடிப்பதால் வாழ்நாளில் 7 நிமிடங்கள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்களில் 57 சதவீதம் பேர் புகை பிடிக்கிறார்கள். பெண்களில் 10.8 சதவீதம் பேர் புகைப்பிடிப்பதாக கூறுகிறார்கள்.
புகையினால் ஏற்படும் தீமைகளை விளக்கி அவற்றை களைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு மேயர் மா.சுப்பிர மணியன் பேசினார்.
இதய மருத்துவ நிபுணர் டாக்டர் சொக்கலிங்கம், எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ., மாநகராட்சி எதிர்க்கட்சித்தலைவர் சைதைரவி, புகையில்லா சென்னை அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஜோசப்ராஜ் ஆகியோர் பேசினார்கள்.
முன்னதாக மணி வரவேற்றார். ஜான்சிராணி நன்றி கூறினார்.