தினமலர் 01.10.2013
புதிதாக குடிநீர் இணைப்பு வழங்க… மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
திருப்பூர் :திருப்பூர் மாநகராட்சி 39வது வார்டு பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதில், முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நிர்ணய கட்டணத்தை விட, மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளதால், பொதுமக்கள், இடைத்தரகர்களை அணுக வேண்டாம் என உதவி கமிஷனர் கண்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், 7,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மாநகராட்சியாக தரம் உயர்த்தியபிறகு, புதிய இணைப்பு வழங்க விண்ணப்பம் பெறப்பட்டது. இதுவரை 3,700 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன; 2,500 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, 570 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
குடிநீர் இணைப்பு பெற, விண்ணப்ப கட்டணம் 25 ரூபாய், வீட்டு இணைப்புக்கு 5,000 ரூபாய், தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் செலுத்த வேண்டும். அதன்பின், 15.5 சதவீதம் அளவுக்கு “சென்டேஜ்’ கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மண் ரோடு, கான்கிரீட் ரோடு மற்றும் தார் ரோடு என மூன்று வகை யாக “சென்டேஜ்’கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மண் சாலைக்கு குறைந்தபட்சம் ஏழு மீட்டருக்கு 850 ரூபாய், 15 மீட்டருக்கு 917 ரூபாய், 22 மீட்டருக்கு 1,088 ரூபாய், அதிகபட்சமாக 90 மீட்டருக்கு 2,257 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
சிமென்ட் தளமாக இருந்தால், ஏழு மீட்டருக்கு 2,092 ரூபாய், 15 மீட்டருக்கு 3,264, அதிகபட்சம் 90 மீட்டருக்கு 14 ஆயிரத்து 344 ரூபாய், தார் ரோடாக இருந்தால், ஏழு மீட்டருக்கு 2,894 ரூபாய், 15 மீட்டருக்கு 4,742 ரூபாய், அதிகபட்சம் 90 மீட்டருக்கு 22 ஆயிரத்து 159 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. “சென்டேஜ்’ கட்டணம் செலுத் தியதும், “ஒர்க் ஆர்டர்’ வழங்கப்படுகிறது.
மாநகராட்சி 39வது வார்டு, ஜெய் நகர் மற்றும் வள்ளியம்மை நகர் பகுதி மக்கள் கூறுகையில், “வீடு கட்டி 10 ஆண்டுகள் ஆகியும் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. எப்படியாவது இணைப்பு பெற மக்கள் தயாராக இருக்கின்றனர். இதை பயன்படுத்தி, கவுன்சிலர் கூறியதாக தெரிவித்து, சில பிளம்பர்கள் நாங்கள்தான் இணைப்பு கொடுப்போம் என்று கட்டாயப்படுத்துகின்றனர். பணம் செலுத்துவது முதல் குழாய் பதித்து, இணைப்பு கொடுக்கும் வரை நாங்கள் செய்கிறோம் என்று கூறி, ஒரு வீட்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆனால், குறைவான தொகைக்குத்தான் பில் கொடுக்கின்றனர். குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடக்கிறது,’ என்றனர்.
மாநகராட்சி உதவி கமிஷனர் கண்ணனிடம் கேட்டபோது,””குடிநீர் இணைப்பு பெற வேண்டுமெனில், இடைத்தரகர்களை அணுக வேண்டாம். மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், நிர்ணய கட்டணம் மற்றும் “சென்டேஜ்’ கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும். “ஒர்க் ஆர்டர்’ பெற்றுக்கொண்டு, அதிகாரிகள் முன்னிலையில், பிளம்பர் நியமித்து, சொந்த செலவில் குடிநீர் குழாய் பதித்து இணைப்பு கொடுக்கலாம்,” என்றார்.
சில பிளம்பர்கள் நாங்கள்தான் இணைப்பு கொடுப்போம் என்று கட்டாயப்படுத்துகின்றனர். ஒரு வீட்டுக்கு 14 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கின்றனர். ஆனால், குறைவான தொகைக்குத்தான் பில் கொடுக்கின்றனர். குடிநீர் இணைப்பு வழங்குவதில் முறைகேடு நடக்கிறது