தினத்தந்தி 03.07.2013
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு குடிநீர் இணைப்புகள் விரைவில் வழங்க ஏற்பாடு: மாநகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு
கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு
விரைவில் குடிநீர் இணைப்பு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக
அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடிநீர் இணைப்பு
கோவை மாநகராட்சி பகுதியில் சிறுவாணி, பில்லூர், ஆழியாறு மற்றும் பவானி
கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு
வருகிறது. தென்மேற்கு பருவமழை காரணமாக கோவைக்கு குடிநீர் வழங்கக் கூடிய
அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால் தற்போது கோவை மாநகராட்சி
பகுதிகளுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுகிறது.
இதற்கிடையே மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடியிருந்து வருபவர்களில்
குடிநீர் இணைப்பு பெறாதவர்கள் தங்களுக்கு புதிய இணைப்பு கேட்டு கோவை
மாநகராட்சியில் விண்ணப்பம் கொடுத்தனர். இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
விண்ணப்பங்கள் கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், புதிதாக
குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் ஜூலை மாதம் 1–ந் தேதி
முதல் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று மேயர் தெரிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து புதிய குடிநீர் இணைப்புகள் எப்போது வழங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–
விரைவில் வழங்க ஏற்பாடு
கோவை மாநகராட்சி பகுதியில் மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. புதிதாக குடிநீர் இணைப்பு கேட்டு 3
ஆயிரத்து 500–க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பம் செய்து உள்ளனர்.
அவர்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அரசுக்கு அறிக்கை அனுப்பி
வைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அரசு உத்தரவு வரும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. உத்தரவு வந்ததும், முன்னுரிமை அடிப்படையில்
விண்ணப்பித்த அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.
இணைப்பு துண்டிப்பு
தற்போது மாநகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு 4 நாட்களுக்கு ஒருமுறை
குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதில் ஒருசிலர் வீட்டில் மின்மோட்டார்
வைத்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாக தொடர்ந்து புகார் வந்து கொண்டு
இருக்கிறது. மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சும்போது, மேடான பகுதிகளுக்கு
தண்ணீர் செல்ல சிரமம் ஏற்படுகிறது.
எனவே குடிநீர் இணைப்பில் மின்மோட்டாரை வைத்து தண்ணீர் உறிஞ்சுவது
கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்களின் குடிநீர் இணைப்பு
துண்டிக்கப்படுவதுடன், நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.