தினமணி 30.03.2010
புதிய உறுப்பினர்களுக்காக தயாராகும் மாநகராட்சி கூட்ட மண்டபம்
பெங்களூர், மார்ச் 29: புதிய மேயர் மற்றும் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான கூட்ட அரங்கம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி மன்றத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் ஏப்ரல் 5-ம் தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகக்குறைந்த அளவில் 44 சதவிகித வாக்குகளே பதிவாகியுள்ளன. ÷
முந்தைய மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகளே இருந்தன. இப்போது பெங்களூர் மாநகராட்சியுடன் 7 நகரசபைகள், ஒரு டவுன் பஞ்சாயத்து மற்றும் 110 கிராம பஞ்சாயத்துக்கள் சேர்க்கப்பட்ட பிறகு இந்தத் தேர்தல் நடந்துள்ளது. இதனால் வார்டுகளின் எண்ணிக்கை 198 ஆக அதிகரித்துள்ளது.
÷மாநகராட்சியின் கூட்ட மண்டபம் பெங்களூர் என்.ஆர். சதுக்கத்தில் உள்ள மாநகராட்சித் தலைமை அலுவல வளாகத்தில் உள்ளது.
முன்பு இந்த கூட்ட மண்டபத்தில் 100 உறுப்பினர்கள் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இருக்கவே இட வசதி இருந்தது. புதிய மாநகராட்சியில் 198 உறுப்பினர்கள் இருப்பார்கள். மேலும் மாநகராட்சின் எல்லை விரிவடைந்துவிட்டதால்அதிகாரிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.
÷இந்த வகையில் கூட்ட மண்டபத்தில் குறைந்தபட்சம் 380 பேர் அமர இருக்கை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கானப் பணியில் கவுன்சில் செயலாளர் ஈடுபட்டுள்ளார். ÷
மேயர், துணை மேயர் மற்றும் உறுப்பினர்களுக்கு புதிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பழைய கூட்ட மண்டபத்திலேயே இதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் இட நெருக்கடி ஏற்படும் நிலை உள்ளது.
÷ஏற்கெனவே மாநகராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஆக இருந்தபோது உறுப்பினர்கள் தாராளமாக எழுந்து சென்றுவரும் வகையில் இட வசதி இருந்தது.
இப்போது உறுப்பினர்கள் எண்ணிக்கை, அதிகாரிகள் எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால் இந்த இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பத்திரிகையாளர்கள் அமரும் இடம் சற்றுக் குறைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர் மாடம் மேல் பகுதியில் இருப்பதால் பாதிப்பு ஏதும் இல்லை.
காங்., ம.ஜனதாதளம் கூட்டணி?: மாநகராட்சி மன்றத் தேர்தலில் எந்தக்கட்சி ஆட்சி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசியல் ஆர்வலர்கள் உள்ளனர். வாக்குப்பதிவு மிகவும் குறைவாக பதிவாகியிருப்பது, அரசியல் கட்சித் தலைவர்களுக்கு இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், மாநகராட்சி நிர்வாகத்தைப் பிடிக்க சுயேச்சைகளின் ஆதரவைப் பெற பாஜக முயற்சிக்கும்.
÷மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் சேர்ந்து நிர்வாகத்தைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கும். எனவே, எல்லோரும் தேர்தல் முடிவை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.