தினமணி 04.07.2013
தினமணி 04.07.2013
புதிய குடிநீர் திட்டப் பணிகள் ஆய்வு
வந்தவாசி நகராட்சி சார்பில் ரூ.10.90 கோடி செலவில்
நடைபெறும் புதிய குடிநீர் திட்டப் பணிகளை வேலூர் மண்டல நகராட்சி நிர்வாக
இயக்குநர் நடராஜன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
வந்தவாசி நகராட்சி சார்பில் அனக்காவூரில் அமைக்கப்பட்டுள்ள தலைமை
நீரேற்று நிலையம் மூலம் செய்யாற்றிலிருந்து வந்தவாசி நகருக்கு குடிநீர்
விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரூ.10.90 கோடி செலவில்
மேலும் ஒரு புதிய குடிநீர் திட்டத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக செய்யாற்றில் 4 உறிஞ்சு கிணறுகள், அனக்காவூர் தலைமை நீரேற்று
நிலையத்தில் 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத் தொட்டி ஆகியவை
அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வேலூர் மண்டல நகராட்சி
நிர்வாக இயக்குநர் நடராஜன் புதன்கிழமை ஆய்வு செய்தார். பணிகளை விரைந்து
முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின்போது செய்யாற்றில் உறிஞ்சு கிணறு அமைக்கும் பணி நடைபெறும்
பகுதிக்கு அருகிலேயே 2 இடங்களில் தனியார் மூலம் போர்வெல் போடப்பட்டு நீர்
உறிஞ்சப்படுவதை கண்ட அவர் இதுகுறித்து பொதுப்பணித் துறைக்கு புகார்
தெரிவிக்கும்படி வந்தவாசி நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ஈ.மகாதேவனுக்கு
உத்தரவிட்டார்.
வேலூர் மண்டல நகராட்சி பொறியாளர் தீனதயாளன், வந்தவாசி நகர்மன்றத் தலைவர்
அப்சர் லியாகத், பணி மேற்பார்வையாளர் அமுதன் உள்ளிட்டோர் ஆய்வின்போது
உடனிருந்தனர்.