தினமலர் 04.05.2010
புதிய தொட்டியை பயன்படுத்தாமல் நகரைக் கெடுக்கும் கோபி நகராட்சி
கோபிசெட்டிபாளையம்:குப்பை சேகரிக்க புதிதாக வாங்கப்பட்ட தொட்டிகள், கோபி பூங்காவில் புழுதி மண்டி கிடக்கின்றன. ஆனால், உடைந்த பழைய குப்பை தொட்டிகளில் குப்பை சேகரித்து, நகரெங்கும் சிதற விடும் பணியும் தொடர்ந்து நடக்கிறது.கோபி நகரின் முக்கிய இடங்களில் குப்பை சேகரிக்க இரும்பு தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் சேரும் குப்பையை, தொட்டியோடு லாரி மூலம் எடுத்துச் சென்று, ஈரோடு ரோடு கரட்டூர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.உடைந்த நிலையில் உள்ள தொட்டிகளில் குப்பையை சத்தி மற்றும் ஈரோடு ரோடு வழியே லாரியில் எடுத்துச் செல்லும் போது, வழிநெடுக குப்பை சிதறியபடி செல்கிறது.இதனால், நகரில் அசுத்தக்கேடும், துர்நாற்றமும் ஏற்படுகிறது. உடைந்த பழைய குப்பை தொட்டிகளை சீரமைக்க வேண்டும் என பல நகராட்சி கூட்டங்களில், பல்வேறு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் குரல் எழுப்பியும் நகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.
இதனிடையே, கோபி வடக்கு வீதியில் உள்ள நகராட்சி பூங்காவில் புதிதாக செய்யப்பட்ட 15 இரும்பு குப்பை தொட்டிகள், பல மாதங்களாக பயன்படுத்தப்படாமல் பழைய பொருட்களோடு சேர்த்து வைக்கப்பட்டுள்ளன. பார்க்கில் உள்ள மரங்களில் உள்ள பறவைகளின் எச்சங்கள் விழுந்தும், வெயில் மற்றும் மழையில் கிடக்கும் புதிய இரும்பு குப்பை தொட்டிகள் பழுதடையும் நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்களின் லட்சக்கணக்கான ரூபாய் வரிப்பணம் கோபி நகராட்சி நிர்வாகத்தால் வீணடிக்கப்பட்டு வருகிறது.கோபி நகர மக்களின் நலன் கருதி, உடைந்து போன பழைய குப்பை தொட்டிகளுக்கு பதிலாக, புதிதாக செய்யப்பட்ட தொட்டிகளை பயன்படுத்த நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி நகராட்சி சுகாதார அலுவலர் ஆறுமுகம் கூறுகையில், ”கோபி நகராட்சி பூங்காவில் வைக்கப்பட்டுள்ள புதிய குப்பை தொட்டிகள் இன்னும் இரண்டொரு நாளில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அப்போது உடைந்த பழைய இரும்பு தொட்டிகள் கண்டிப்பாக மாற்றப்பட்டு விடும்,” என்றார்.