தினமணி 20.09.2009
புதிய பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
சேலம், செப். 19: சேலம் புதிய பஸ் நிலையப் பகுதியில் நடைபாதை கடைகள், ஆக்கிரமிப்புகள் சனிக்கிழமை அதிரடியாக அகற்றப்பட்டன.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் 87 கடைகளுக்கு அரசு அனுமதி உள்ளது. இதில் பழக்கடை, செருப்பு, கரும்புச் சாறு, பல்பொருள்கள் கடை என 56 கடைகள் வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவை குடோன்கள் போல செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய பஸ் நிலையத்தில் அனுமதி பெறாமல், பழக்கடை, பூக்கடை, தள்ளு வண்டிக் கடைகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வந்தன.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பஸ்களும், லட்சக்கணக்கான பயணிகளும் வந்து செல்லும் பஸ் நிலையத்தில் ஆக்கிரமிப்புக் கடைகளால் பெரும் இடையூறு ஏற்பட்டு வந்தது.
எதிர்ப்பு–கடையடைப்பு
இதுகுறித்து மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி, அனுமதி பெற்ற கடைகளின் உரிமையாளர்கள் ஒரு நாள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்ற மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டார். சனிக்கிழமை காலை கடைகள் அகற்ற முடிவு செய்யப்பட்டது. 200 போலீஸôர்
இதையடுத்து ஆணையர் பழனிசாமி, ஆர்.டி.ஓ. குழந்தைவேலு, வட்டாட்சியர் வீரமணி, உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவிப் பொறியாளர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள், துப்புரவுப் பணியாளர்கள் 100 பேர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
இதேபோல் மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஜான் நிக்கல்சன் தலைமையில், உதவி கமிஷனர்கள் கோபால், பாஸ்கரன், 6 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்–இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 200 போலீஸôர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மாநகராட்சி அதிகாரிகள், போலீஸôர் புதிய பஸ் நிலையத்தைச் சுற்றிலும் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றி, மாநகராட்சி வாகனங்களில் ஏற்றினர்.
அனுமதி பெற்ற கடைக்காரர்கள் கடைக்கு வெளியேயுள்ள இடத்தை ஆக்கிரமித்து வைத்திருந்த பொருள்களையும், விளம்பரப் பலகைகளையும் அவர்கள் அகற்றினர். இதற்கு கடைகளின் உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து ஆணையர் பழனிசாமி கூறியது:
புதிய பஸ் நிலையத்தில் அனுமதி வழங்கப்பட்ட கடைகள் மட்டுமே இனி செயல்பட முடியும். அனுமதிக்கப்பட்ட கடைகளும் அவர்களுக்கு எதற்காக வழங்கப்பட்டதோ, அந்த பயன்பாட்டுக்கு மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
கடைக்கு முன் ஆக்கிரமிப்புகள் இருந்தால் தொடர்ந்து அகற்றப்படும். இனி புதிதாக ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்படும்.
அவர்கள் தினசரி ரோந்து வந்து ஆக்கிரமிப்பு கடைகள் வராத வண்ணம் பாதுகாப்பார்கள். இதேபோல் ஒரு சப்–இன்ஸ்பெக்டர் தலைமையில் 15 போலீஸôர் நிரந்தரமாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.