தினமணி 19.02.2010
புதிய பஸ் நிலையத்தில் சுகாதாரக் கேடு: உணவகம் மூடல்
திருநெல்வேலி,பிப்.18: திருநெல்வேலி,புதிய பஸ் நிலையத்தில் சுகாதார சீர்கேட்டுடன் செயல்பட்ட ஹோட்டலை மாநகராட்சி அதிகாரிகள் வியாழக்கிழமை மூடினர்.
வேய்ந்தான்குளத்தில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் செயல்படும் ஹோட்டல்கள்,டீ கடைகள் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந் நிலையில் நாகர்கோவில் பஸ்கள் நிற்கும் பகுதி அருகே கழிப்பறை அருகே உள்ள ஒரு ஹோட்டல்,பெரும் சுகாதார சீர்கேட்டுடன் செயல்படுவதாக மாநகராட்சி ஆணையர் கா.பாஸ்கரனுக்கு புகார் சென்றுள்ளது.
அவரது உத்தரவின்பேரில்,மாநகராட்சி உதவி ஆணையர் எல்.கே.பாஸ்கர்,உணவு ஆய்வாளர் அ.ரா.சங்கரலிங்கம், சுகாதார ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் அந்த ஹோட்டலை வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது அந்த ஹோட்டலில் மிகவும் சுகாதார சீர்கேட்டுடன் உணவு தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. உடனே அந்த ஹோட்டலின் உரிமையாளர் பாளையங்கோட்டையைச் சேர்ந்த தங்கமுத்துக்குமாரை,அவர்கள் எச்சரித்தனர்.பின்னர்,அந்த ஹோட்டலை மூட அவர்கள் உத்தரவிட்டனர்.இதையடுத்து அந்த ஹோட்டல் மூடப்பட்டது.
இச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.