தினகரன் 23.07.2010
புதிய பஸ் நிலையம் கட்டும் பணி மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் டெண்டர் விட இடைக்கால தடை
சென்னை, ஜூலை 23: மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் பஸ் நிலையம் கட்ட விடப்பட்டுள்ள டெண்டரில் இறுதி முடிவு எடுக்கக்கூடாது என மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாமல்லபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘மாமல்லபுரத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என மாமல்லபுரம் பேரூராட்சி அறிவித்தது. பின்னர், பூஞ்சேரி கிராமத்தில் 8 ஏக்கரில் பஸ் நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. பூஞ்சேரி கிராமம், மாமல்லபுரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இது பயணிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, பூஞ்சேரி கிராமத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட தடைவிதிக்க வேண்டும். அதற்கான டெண்டரை ரத்து செய்ய வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை, நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், கே.கே.சசிதரன் ஆகியோர் விசாரித்தனர். பூஞ்சேரி கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் டெண்டரில் இறுதி முடிவு எடுக்க கூடாது’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதுதொடர்பாக 2 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய மாமல்லபுரம் பேரூராட்சிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மனுதாரர் வக்கீல் கமலநாதன் ஆஜரானார்.