தினமலர் 12.02.2010
புதிய விதிமுறைகளை அமல்படுத்த கால அவகாசம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
கோவை:””மத்திய சுற்றுப்புறச் சூழல் விதிமுறைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை, தொழிற்சாலைகளில் அமல்படுத்த போதுமான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,” என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்:நேற்று கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:
தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளில் காற்று, நீர் ஆகியவை மாசுபடுகிறது. இவை இரண்டின் வாயிலாக சுற்றுப்புறம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. சுற்றுப்புறச் சூழலை கட்டுப்படுத்த, மத்திய அரசு இந்த புதிய உத்தரவை கடந்த நவம்பரில் வெளியிட்டுள்ளது. இவற்றை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு, தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் தொழிற்சாலைகள் அமல்படுத்த காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.கோவையில் குடியிருப்பு பகுதியில் இயங்கிய 65 சிறு மின்முலாம் பூச்சு தொழிற்சாலைகள் மாற்றம் செய்யப்பட்டு, சர்க்கார் சாமக்குளம் பகுதியில் 8.4 ஏக்கர் பரப்பளவில் மின்முலாம் பூச்சு தொழிற்சாலை பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு 56 மின்முலாம் பூச்சு தொழிற்சாலைகள் அமைய உள்ளன.
இதே போல சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, பி கரிசல்குளம் பகுதியில் 8.4 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, மின்முலாம் பூச்சு தொழிற்சாலைகளுக்காக தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலை வசதிகளும் அமைக்கப்படுகிறது. இங்கு 48 குறு, 16 நடுத்தர, 16 பெரிய தொழிற்சாலைகள் அமைக்கப்படுகிறது. இவையனைத்தும் குடியிருப்பு பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலைகளாகும்.
கோவையில் மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பொருட்களை ஆயிரத்து 400 பாரன்ஹீட் வெப்பம் ஏற்படுத்தி அழிப்பதற்கு, ஏ.சி.சி., நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்யப்போகிறோம். இந்நிறுவனம் ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் இப்பணி மேற்கொண்டு சிறப்பாக செயல்படுத்தியுள்ளது.நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இத்திட்டத்தை சென்னையிலுள்ள சிமெண்ட் கம்பெனி சிறப்பாக செயல்படுத்தி வருகிறது, என்றார் பாலகிருஷ்ணன்.