தினமலர் 19.08.2010
புதுக்குளத்தில் மீண்டும் படகுசவாரி : நகராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை
புதுக்கோட்டை: “புதுக்கோட்டை புதுக்குளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகு சவாரியை மீண்டும் துவக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்‘ என நகர்ப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.புதுக்கோட்டை நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் உள்ளது புதுக்குளம். கிட்டத்தட்ட இரண்டு கி.மீ., தூர சுற்றளவு கொண்ட இக்குளத்தின் கரைகள் விசாலமானவை என்பதால் நகர்ப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானபேர் குளத்தைச் சுற்றி காலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்வது வழக்கம்.புதுக்கோட்டை நகர்ப்பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் இவை உள்ளது. பொதுவிடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் புதுக்கோட்டை நகர் மட்டுமின்றி சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் புதுக்குளத்துக்கு வந்து பொழுதுபோக்கி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதற்காக குளத்தை சுற்றி டைல்ஸ் பதிக்கப்பட்ட நடைபாதை, இருக்கை வசதி, நிழற்கு டை, படகு சவாரி மற்றும் சிறுவர் பூங்கா போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பட கு சவாரி குழந்தைகள் முதல் மு தியவர்கள் வரையிலான அனைத்துதரப்பு பயணிகளையும் குஷிப்படுத்துவதாக அமைந்தது.படகு சவாரிக்காக இரண்டு ஃபைபர் படகு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவற்றில் வெளிப்பொருத்து இயந்திரம் (அவுட்போட் இன்ஜின்) பொருத்தப்பட்டு இயக்கப்பட்டது.படகில் குளத்தை ஒருமுறை சுற்றிவர சிறுவர்களிடமிருந்து 5 ரூபாய், பெரியவர்களிடமிருந்து 10 ரூபாய் என கட்டணம் வசூல் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் படகு சவாரியை நகராட்சி நிர்வாகமே நேரடியாக நடத்தியது. இதன்மூலம் ஆண்டுதோறும் ஒரு லட்சம் ரூபாய்வரை நகராட்சிக்கு வருவாய் கிடைத்தது.மாதங்கள் செல்லச் செல்ல படகு சவாரியின் மூலமான வருவாய் குறைந்ததால் ஒப்பந்த அடிப்படையில் இவை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. சில மாதங்கள் நீடித்த நிலையில் படகு சவாரி திடீரென்று நிறுத்தப்பட்டது. படகுகளில் பொருத்தப்பட்டிருந்த 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் இரவோடு இரவாக மாயமானது.படகு இயந்திரம் மாயமானதோடு மட்டுமின்றி குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை மற்றும் இருக்கை ஒவ்வொன்றாக மாயமாகி வந்தது. இதுகுறித்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுப்பதற்கு கூட நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை.சமூக விரோதிகளால் பாதுகாப்பற்ற நிலை உருவானதைத் தொடர்ந்து பொழுது போக்குவதற்காக வரும் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. இதை சாதகமாக்கிக் கொண்ட சமூக விரோதிகள் குளத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். குளத்தின் கரை மற்றும் படகு கவுன்டர் திறந்தவெளி பார்களாக மாறியுள்ளது.சமூக விரோதிகளிடமிருந்து புதுக்குளத்தை மீட்டு போலீஸ் பாதுகாப்புடன் படகு சவாரியை மீண்டும் துவக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என நகர்ப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.