தினமலர் 15.05.2010
புதுவண்ணாரப்பேட்டை கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு
வண்ணாரப்பேட்டை: ‘தினமலர்‘ செய்தி எதிரொலி காரணமாக புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவில் தேங்கியிருந்த கழிவுநீர் அதிரடியாக அகற்றப்பட்டது. மேலும், அப்பகுதி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. புதுவண்ணாரப்பேட்டை, இருசப்ப மேஸ்திரி இரண்டாவது தெருவில் கழிவுநீர் குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.
பல மாதங்களாக நீடித்து வரும் பிரச்னையால், அப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் தொற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்பிற்கு பொதுமக்கள் ஆளாகி வருகின்றனர். இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் கழிவுநீர் பிரச்னைக்கு இன்னும் நிரந்தர தீர்வு எட்டப்படாமல் இருந்தது. இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் திருவொற்றியூர் நெடுஞ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து, ‘தினமலர்‘ நாளிதழ் படத்துடன் கூடிய செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக நேற்று அதிகாலை மாநகராட்சி மண்டல குழு தலைவர் டன்லப் ரவி தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். பின், மாநகராட்சி ஊழியர்கள் மூலம் பாதாள சாக்கடையில் இருந்த அடைப்பு இயந்திரம் மூலம் சரி செய்யப்பட்டது. மேலும், அப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் பழுதடைந்த குழாய்களை மாற்றியமைக்கவும் உத்தரவிடப்பட்டது.