தினமணி 19.12.2009
புதுவையில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த தடை
புதுச்சேரி, டிச. 18: புதுச்சேரியில் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை துணைநிலை ஆளுநர் இக்பால்சிங் பிறப்பித்துள்ளார்.
கடைக்காரர், வியாபாரி, மொத்த வியாபாரி, சில்லறை வியாபாரி, வர்த்தகர்கள் எவரும் பாலித்தீன், பிளாஸ்டிக் தூக்குப் பைகள் போன்றவற்றை 50 மைக்ரான் தடிமனுக்குக் குறைவாக பயன்படுத்தவும், விற்பனை செய்யவும், சேமித்து வைக்கவும் கூடாது. 8 அங்குலம் அகலம் மற்றும் 12 அங்குலம் நீளத்துக்குக் குறைவாகவும் இது இருக்கக் கூடாது. ஒருமுறை பயன்படுத்தியப் பிறகு தூக்கி வீசக்கூடிய பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்டுகளின் தடிமனும் 50 மைக்ரானுக்குக் குறைவாக இருக்கக் கூடாது. இதைத் தவிர பயன்படுத்தப்படும் தூக்குப் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்டுகளை உற்பத்தி செய்தவர்களின் முகவரி, தடிமன், அளவு போன்ற விவரங்கள் அதில் அச்சடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
பிளாஸ்டிக் தடை தொடர்பான உத்தரவை அமல்படுத்த அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம்:
துணை ஆட்சியர்கள், மாஹே, யேனம் மண்டல
நிர்வாகிகள், அறிவியல் சுற்றுச்சூழல்துறை இயக்குநர், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு உறுப்பினர் செயலர், புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், நகராட்சி சுகாதார அதிகாரிகள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதாரத்துறை உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள் இந்தத் தடை உத்தரவை அமல் செய்ய வேண்டும்.
புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுவின் உறுப்பினர் செயலர் இந்தச் சட்டத்தை அமல் செய்யும் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மாசு கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் மற்றும் இக் குழுவின் உறுப்பினர் செயலர் ஆகியோர் விதிமுறையை மீறியோர் மீது புகார் செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களால் தள்ளிப்போன தடை உத்தரவு
புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்கள் ஜூன் மாதம் முதல் தடை செய்யப்படும் என்று முதல்வர் வைத்திலிங்கம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து
உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஊர்வலம் நடத்தினர். அதற்குப் பிறகு ஒன்றரை மாதம் காலஅவகாசம் கொடுப்பதாக அரசு அறிவித்தது. ஆனால் காலம் கடத்தப்பட்டு வந்தது.
இதற்கிடையில் பல்வேறு பொது நல அமைப்புகள் அரசின் கவனத்தை பல்வேறு வகையிலும் தொடர்ந்து ஈர்த்து வந்தன. இந்நிலையில் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து துணைநிலை ஆளுநர் அறிவிக்கை வெளியிட்டுள்ளார்.