புத்துயிர் பெறுமா ஈரோடு மாநகராட்சி?
ஈரோடு மாநகராட்சிக்கு அதிகாரிகள், ஊழியர்கள் பணியிடங்களை உருவாக்கி, புத்துயிர் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளுக்கு அடுத்து, 2008-ஆம் ஆண்டில், மாநிலத்தின் 7-ஆவது மாநகராட்சியாக உருவானது ஈரோடு மாநகராட்சி. அதைத் தொடர்ந்து திருப்பூர், வேலூர், தூத்துக்குடி மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டன.
அவசரகதியில் உருவாக்கப்பட்ட புதிய மாநகராட்சிகளில் அப்போதைய நகர்மன்றத் தலைவர்களே முதல் மேயர்களாகப் பதவியேற்றனர். இம்மாநகராட்சிகளில் ஆணையர் பதவியில், நகராட்சிகளின் இணை இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இவை மாநகராட்சியாக மாறிய நாளில் இருந்தே பல குழப்பமான நடைமுறைச் சிக்கல்கள் தொடர்ந்து நிலவி வருகின்றன. சொத்துவரி விதித்தல், குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு, குப்பை அகற்றுதல் உள்ளிட்டவற்றில் ஆள் பற்றாக்குறை காரணமாக, மக்கள் அளிக்கும் மனுக்கள் தேங்கிக் கிடக்கின்றன.
மாநிலத்தில் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், இம்மாநகராட்சிகளுடன் சில உள்ளாட்சிகள் முறைப்படி இணைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. இப்போது மக்களால் தேர்வு செய்யப்பட்ட முறையான மேயர், மாமன்ற உறுப்பினர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
முதலில் இருந்த 6 மாநகராட்சிகளிலும் ஆணையர் பொறுப்பில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும், துணை ஆணையர் பொறுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்திலான அதிகாரிகளும், உதவி ஆணையர்கள் பொறுப்பில் முதல்நிலை நகராட்சி ஆணையர் அந்தஸ்திலான அதிகாரிகளும் உள்ளனர்.
ஆனால், ஈரோடு உள்ளிட்ட புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளில், இப்போது நகராட்சிகளின் இணை இயக்குநர் அந்தஸ்திலான அதிகாரிகளும், உதவி ஆணையர் பொறுப்பில் உதவி செயற்பொறியாளர் அந்தஸ்திலான அதிகாரிகளும் தான் உள்ளனர். துணை ஆணையர் பதவியே இல்லை.
அதிலும் அதிகாரிகளில் சிலர் இரண்டு அல்லது மூன்று பதவிகளைக் கொண்டிருக்கின்றனர். இதனால், அவர்களால் முழுமையாக தங்களது பணிகளைச் செய்ய முடியாத நிலை உள்ளது.
அதேபோல துப்புரவு ஆய்வாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாக உள்ளது. குறிப்பாக மாநகராட்சிப் பகுதியில் 1,000 மக்களுக்கு 3 துப்புரவாளர்கள் இருக்க வேண்டும். ஈரோட்டில் 2,000 பேருக்கு 3 துப்புரவாளர் என்ற நிலை தான் உள்ளது.
ஈரோடு நகராட்சியாக இருந்தபோது 620 துப்புரவாளர்கள் இருந்தனர். இப்போது காசிபாளையம், வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி நகராட்சிகள், பி.பி.அக்ரஹாரம், சூரியம்பாளையம் பேரூராட்சிகள், கங்காபுரம், எல்லப்பாளையம், திண்டல், வில்லரசம்பட்டி, முத்தம்பாளையம் ஆகிய ஊராட்சிகள் இணைந்த பின்னர்- மாநகராட்சியின் பரப்பு அதிகரித்த பின்னரும், 640 துப்புரவாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ஈரோடு மாநகராட்சியில் நாளொன்றுக்கு 275 டன் முதல் 300 டன் வரை குப்பைகள் வெளியாகின்றன. இதில் 60 சதவிகித குப்பைகளை மட்டுமே மாநகராட்சியால் அகற்ற முடிகிறது. இதனால், தங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அதிகாரிகளும், ஆளுங்கட்சியினரும் தினமும் புலம்புகின்றனர்.
ஈரோடு மாநகராட்சியில் 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 4 லட்சத்து 99 ஆயிரத்து 121 பேர் உள்ளனர். 109.52 சதுர கி.மீ. பரந்துவிரிந்துள்ள இந்த மாநகராட்சிக்கு, இப்போதுள்ள மக்கள்தொகை எண்ணிக்கையின் படி குறைந்தபட்சம் 1,400 துப்புரவாளர்கள், 60 துப்புரவு ஆய்வாளர்கள், 60 மேஸ்திரிகள் தேவை. இல்லையெனில் குப்பையை முழுமையாக அகற்ற முடியாது.
இதுகுறித்து ஈரோடு மேயர் ப.மல்லிகா பரமசிவம் கூறியது:
ஈரோடு மாநகராட்சிக்குத் தேவையான கூடுதல் அதிகாரிகள், ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் குறித்த அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசின் கவனத்துக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வரின் கவனத்துக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி.இராமலிங்கமும் கொண்டுசென்றுள்ளார். கூடுதல் அதிகாரிகள், ஊழியர்கள், துப்புரவாளர்களை நியமிக்க உரிய அனுமதி விரைவில் கிடைக்கும் என்றார்.
ஈரோடு மட்டுமின்றி புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சிகளும் ஆள் பற்றாக்குறையால் நெருக்கடியான நிலையில் தவித்து வருகின்றன. இந்தப் புதிய மாநகராட்சிகளுக்கு மாநில அரசு புத்துயிர் கொடுப்பது அவசர அவசியம்.