தினமணி 15.09.2009
புளியங்குடியில் ஆக்கிரமிப்புகள் இடிப்பு
புளியங்குடி, செப். 14: புளியங்குடியில், பாலம் கட்டும் கட்டும் பணி நடைபெற்று வருவதையடுத்து, மாற்று ஒருவழிப் பாதையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு
கட்டடங்களை நகராட்சி நிர்வாகத்தினர் திங்கள்கிழமை இடித்தனர்.
புளியங்குடியில், கொல்லம்– திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மார்க்கெட் அருகே இருந்த பழைய பாலம் இடிக்கப்பட்டு, ரூ.80 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இதற்காக புளியங்குடியிலிருந்து தென்காசி, செங்கோட்டை செல்லும் பஸ்களும், தென்காசியிலிருந்து ராஜபாளையம், மதுரை, சென்னை செல்லும் பஸ்களும் பாம்புக்கோவில் சந்தை வழியாக சுற்றிச் செல்கின்றன.
சுமார் 10 கி.மீட்டர் தொலைவுள்ள இந்த குறுகலான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், கார், வேன் போன்ற வாகனங்களும் புளியங்குடி நகருக்குள்ளேயே மாற்று ஒருவழிப் பாதையில் செல்வதற்காக டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்கப் பிரமுகர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சென்னை, மதுரை, சங்கரன்கோவிலில் இருந்து தென்காசி செல்லும் பஸ்கள், புளியங்குடி பஸ் நிலையத்திலிருந்து சுள்ளக்கரை சாலை, அண்ணாநகர், இந்திரா நகர், கற்பகவீதி வழியாக டி.என்.புதுக்குடி வந்தடைந்து தென்காசி செல்ல முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல், தென்காசியிலிருந்து ராஜபாளையம் உள்ளிட்ட வடக்குப் பகுதிக்குச் செல்லும் வாகனங்கள் டி.என்.புதுக்குடி காமராஜர் சிலையிலிருந்து மேட்டுத்தெரு, பள்ளிவாசல், நகராட்சி அலுவலகம் வழியாக புளியங்குடி பஸ் நிலையம் வந்து வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கு செல்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், இந்த மாற்று ஒரு வழிப் பாதையில் வாகனங்கள் செல்ல இடையூறாக இருந்த 1, 12, 20, 23 ஆகிய வார்டுகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடங்களை நகராட்சி பொறியாளர் முகம்மது செரீப் தலைமையிலான அலுவலர்கள், ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அப்புறப்படுத்தினர்.