தினத்தந்தி 07.10.2013
பூங்காவை விரிவுபடுத்த திட்டம் கோவை வ.உ.சி. பூங்காவுக்கு
சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகள் கொண்டு வரப்படுகின்றன

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவை விரிவுபடுத்தி சிங்கம், புலி, கரடி
போன்ற விலங்குகளை பொது மக்கள் பார்வைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளதாக
அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வ.உ.சி உயிரியல் பூங்கா
கோவை மாநகராட்சி வ.உ.சி உயிரியல் பூங்காவில் குரங்கு வகைகள், பறவை
வகைகள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. தற்போது இங்கு குரங்குகள்,
மான்கள், வெளிநாட்டு பறவைகள், ஒட்டகம், நரி, முதலைகள், பாம்புகள், கொடிய
விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்புகள் உள்பட 800–க்கும் மேற்பட்ட
உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகர பகுதியில் உள்ளவர்களுக்கு பொழுதுபோக்கு இடம் உயிரியல் பூங்கா
மட்டும் உள்ளதால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து
வருகிறது. அதுதவிர கோவைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளும் இந்த பூங்காவுக்கு
வந்து செல்கிறார்கள்.
சிறிய மிருகங்கள்
சுமார் 4½ ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா கடந்த 1965–ம் ஆண்டு
உருவாக்கப்பட்டது. கடந்த 2003–ம் ஆண்டு வரை இங்கு சிங்கம், புலி, கரடி
வகைகள் இருந்தது. பெரிய மிருகங்களை வைத்து பராமரிப்பு செய்ய குறைந்தது 25
ஏக்கர் நிலமாவது தேவை என்பதால், அந்த மிருகங்கள் அனைத்தும் இடமாற்றம்
செய்யப்பட்டன. தற்போது சிறிய மிருகங்கள் மட்டும் பராமரிக்கப்பட்டு
வருகிறது.
பூங்கா மிகவும் குறுகலாக இருப்பதாலும், அங்கு வருபவர்களின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதாலும், வேறு இடத்துக்கு மாற்றலாமா என்று ஆலோசனை
செய்யப்பட்டது. அதற்காக எட்டிமடை அருகே ஆய்வும் செய்யப்பட்டது. அந்த இடம்
தூரமாக இருந்ததால், அனைத்து தரப்பு மக்களும் அங்கு செல்வார்களா என்ற
சந்தேகம் எழுந்ததால், பூங்காவை இடம் மாற்றும் பணியை அதிகாரிகள் நிறுத்தி
வைத்தனர்.
பூங்காவை விரிவுபடுத்தும் திட்டம் எதாவது உள்ளதா என்று மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:–
பெரிய விலங்குகள்
தற்போது பூங்கா 4½ ஏக்கரில் உள்ளது. மேற்கொண்டு 25 ஏக்கர் நிலம்
பூங்காவுக்கு நிலம் தேர்வு செய்து அதற்கான நிலத்தை பெற்ற பின்னர் அங்கு
பெரிய விலங்குகளான சிங்கம், புலி, கரடி போன்ற விலங்குகளை பராமரிக்க திட்டம்
தீட்டப்பட்டு உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு தேசிய பூங்கா இயக்குனரக
அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. அவர்களும் விரைவில் வந்து
பார்ப்பதாக பதில் அனுப்பி உள்ளனர்.
எனவே பூங்காவின் அருகே உள்ள மத்திய சிறைக்கு சொந்தமான இடத்தில் இருந்து
பூங்காவுக்கு தேவையான நிலத்தை கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை
அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதற்கான பதில் கிடைத்ததும், விரிவுபடுத்த
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.