தினமலர் 15.02.2010
பூங்கா அமைக்க ‘ஸ்பான்சர்‘ தேடுகிறது நல்லூர் நகராட்சி
திருப்பூர்:நல்லூர் நகராட்சியில் இரண்டு இடங்களில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது; பூங்கா அமைக்க தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தனியார் வர்த்தக நிறுவனங்கள் முன்வர வேண்டுமென நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.வரும் 2011ல் நல்லூர், 15 வேலம்பாளையம் நகராட்சிகள் மற்றும் முதலிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம் உள்ளிட்ட எட்டு ஊராட்சிகள் மாநகராட்சியோடு இணையப்போகின்றன.
இப்பகுதிகளில் பூங்கா அமைக்க, மாநகராட்சி கமிஷனர் ஜெயலட்சுமி ஆய்வு மேற்கொண்டார். நல்லூர் நகராட்சியில் பொன்முத்து நகர், கே.என்.எஸ்., கார்டன் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தொழிற்சாலைகள் நிறைந்துள்ள திருப்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட இடங்கள் குறைவு. வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் பூங்கா, நூலகம், படகு இல்லம் போன்ற இடங்களை உருவாக்கவும், சுற்றுலா தலங்களை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
இதுகுறித்து நகராட்சி தலைவர் விஜயலட்சுமி கூறுகையில், “”நல்லூர் ஏழாவது வார்டு கே.என்.எஸ்., கார்டன், ஆறாவது வார்டு பொன்முத்து நகர் பகுதியில் பூங்கா அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது, நகராட்சி நிர்வாகம் நிதி ஒதுக்கி செய்யும் நிலை இல்லை. பூங்கா அமைக்க, சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்களிடம் இருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் வர்த்தக நிறுவனங்கள் உதவி செய்ய விரும்பினால், நகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளலாம்,” என்றார்.