தினமணி 07.09.2010
பூதப்பாண்டியில் மைதானம்: ஆட்சியரிடம் மனு
நாகர்கோவில், செப்.6: பூதப்பாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட மத்தியாஸ்நகர் பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்கக் கோரி அப்பகுதி இளைஞர்கள், ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நிகழ்ச்சி ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பூதப்பாண்டி பேரூராட்சியின் 13-வது வார்டுக்கு உள்பட்ட மத்தியாஸ்நகர் பகுதி இளைஞர்கள் பி. சால்பின் தலைமையில் வந்து அளித்த கோரிக்கை மனு:
மத்தியாஸ் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப் பகுதியில் சத்துணவுக் கூடமோ, படிப்பகமோ, விளையாட்டு மைதானமோ இல்லை. இப்பகுதி இளைஞர்கள் பக்கத்து ஊர்களில் சென்று விளையாடுகிறார்கள்.
இதனால் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் நலன் கருதி இப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் புறம்போக்கு இடத்தை தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமிக்க முயற்சி செய்கிறார்கள் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
புதிய வறுமை கோடு பட்டியல் தயாரிக்க கோரிக்கை:
கன்னியாகுமரி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் சி. திரவியம் உள்ளிட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1997-ல் பேரூராட்சி, ஊராட்சி, ஒன்றியங்கள் வாயிலாக தனியாருக்கு ஒப்பந்தம் செய்து வறுமைக் கோடு பட்டியல் தயாரிக்கப்பட்டது.
இதில், ஏராளமான ஏழைகளின் பெயர்கள் விடுபட்டுள்ளன. இதனால் அரசு சலுகைகள், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பெறமுடியவில்லை.
எனவே, இந்தப் பட்டியலை ரத்து செய்துவிட்டு கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் வறுமைக் கோடு பட்டியலை மீண்டும் தயாரிக்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் கோரி மனு:
பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட அன்புநகர் பகுதியைச் சேர்ந்த சி. ராஜகுமாரி உள்ளிட்ட பெண்கள் சிலர் ஆட்சியரிடம் அளித்த மனு:
பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உள்பட்ட மணியன்குழி அருகேயுள்ள அன்புநகரில் சாலை, குடிநீர், மின்சார, பேருந்து வசதிகள் இல்லை. இப் பகுதி வனத்தையொட்டி இருப்பதால் அடிக்கடி காட்டு மிருகங்களால் தொல்லைகள் ஏற்படுகின்றன.
இங்குள்ள குடிசை வீடுகளுக்குப் பதிலாக முதல்வர் வீடு வழங்கும் திட்டத்தில் கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.