பெண்களுக்கான கழிவறைகளின் நிலை குறித்து அறிக்கை தர வேண்டும்
தில்லியில் பெண்களுக்கான கழிவறைகளின் நிலை குறித்து 3 வாரத்துக்குள் மூன்று மாநகராட்சிகள், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்.டி.எம்.சி.), தில்லி கன்டோன்மென்ட் போர்டு ஆகியவை அறிக்கை தர வேண்டும் என்று தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் பெண்கள் பயன்படுத்தும் கழிவறைகள் மோசமாக இருப்பதாகவும், அது குறித்து மாநகராட்சிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டி உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் அசோக் அகர்வால் பொது நல மனு தாக்கல் செய்தார்.
“பெண்களுக்கான கழிவறைகள் பல செயல்படாமல் உள்ளன. இருக்கும் கழிவறைகளும் பராமரிப்பு இல்லாமல் உள்ளன” என்று அசோக் அகர்வால் கூறியிருந்தார். பெண்களுக்கான கழிவறைகளின் நிலை குறித்து நடத்தப்பட்ட ஓர் ஆய்வறிக்கையையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.
அதையடுத்து மாநகராட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் அறிக்கை தர வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அறிக்கைகளுக்குப் பிறகு மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பெண்கள் கழிவறைகளின் நிலை குறித்து மூன்று வார காலத்துக்குள் அறிக்கை தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெüல், இந்தர்மீத் கெüர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தது.