தினமணி 16.09.2009
பெரம்பலூரில் நகராட்சி சார்பில் முப்பெரும் விழா
பெரம்பலூர், செப். 15: பெரம்பலூர் உழவர் சந்தை மைதானத்தில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா, இலவச சமையல் காஸ் அடுப்பு, இணைப்பு வழங்கும் விழா மற்றும் பெரம்பலூர் 4-வது வார்டு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கொள்ளிடம் கூட்டு குடிநீர்த் திட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திறப்பு விழா ஆகிய முப்பெரும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், 128 பயனாளிகளுக்கு இலவச சமையல் காஸ் அடுப்புகளை வழங்கி, ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியைத் திறந்துவைத்து மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார் பேசியது:
பொதுமக்களுக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து நடைமுறைபடுத்தி வருகிறது. மேலும், நகர மக்களுக்கு விரைவில் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்படவுள்ளது. எனவே, இதுபோன்ற திட்டங்களை பெறும் பயனாளிகள் பொழுதுபோக்கு அம்சங்களை மட்டும் பார்க்காமல் உலக நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்‘ என்றார் ஆட்சியர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி. வனிதா, பெரம்பலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் ம. ராஜ்குமார், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் எம்.என். ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஊராட்சித் தலைவர் கொடியரசி துரைசாமி, அரசு வழக்குரைஞர் என். ராஜேந்திரன், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் க. பெரியசாமி, நகராட்சி துணைத் தலைவர் கி. முகுந்தன், மாவட்ட வழங்கல் அலுவலர் எஸ். முகமதுஆரிப், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.ஜி. மாரிக்கண்ணன், எஸ். சிவக்குமார், ஆர். ஈஸ்வரி, ஆர். சுசிலா, எம். தாண்டாயி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நகர்மன்ற உறுப்பினர் அ. அப்துல்பாரூக் வரவேற்றார். நகராட்சி ஆணையர் எஸ். ராமகிருஷ்ணராஜன் நன்றி கூறினார்.