தினமணி 04.01.2010
பெரியசேமூர் நகராட்சியில் என்எஸ்எஸ் முகாம்
ஈரோடு, ஜன. 3: ஈரோடு மாவட்டம், பெரியசேமூர் நகராட்சிக்கு உள்பட்ட தண்ணீர்பந்தல்பாளையம், நெசவாளர்காலனி, சூளை, சின்னசேமூர் பகுதிகளில் சிக்கய்ய நாயக்கர் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட சிறப்பு முகாம் ஒரு வாரம் நடைபெற்றது.
இதையொட்டி கோயில் சீரமைப்பு, நூலகப் பராமரிப்பு, சாலை தூய்மை, பள்ளி வளாகச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன. மேலும் வேலைவாய்ப்பு, கல்வி மேம்பாடு, மகளிர் மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்குகள், பயிலரங்குகள் நடத்தப்பட்டன.
முகாம் நிறைவு விழா சூளை செல்லியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் இர.பாஸ்கரன் தலைமை வகித்தார். பெரியசேமூர் நகராட்சித் துணைத் தலைவர் ப.சுப்பிரமணி முன்னிலை வகித்தார். பாரதிதாசன் கலை, அறிவியல் கல்லூரித் தாளாளர் என்கேகே.பெரியசாமி சிறப்புரையாற்றினார். கோவை பாரதியார் பல்கலை. நாட்டுநலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ப.செல்லசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். முகாமில் பங்கேற்ற மாணவ–மாணவியருக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
முகாமிற்கான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் ப.கமலக்கண்ணன், ஆர்.மோகன்ராஜ், சி.அங்கயற்கண்ணி, அர.ஜோதிமணி செய்திருந்தனர். முகாமின்போது ஒவ்வொரு நாளும் பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் நாளும் நூலகம் செல்வோம், மனமே செயல், என்னைச் செதுக்கியவர்கள், படித்தேன் உயர்ந்தேன், மறைந்து வரும் மனிதநேயம் என்ற தலைப்புகளில் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் இரா.சீனிவாசன், பேராசிரியர்கள் க.இராக்கு, சா.சிவமணி, ந.மணிகண்ணன், இரா.விஸ்வநாதன், தியாகராஜன், சதீஷ்குமார், ஆ.ரேவதி பேசினர்.