தினமணி 13.04.2010
பெருகி வரும் தெரு நாய்களால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிப்பு
சென்னை, ஏப். 12: நாய்கள் அனைத்தையும் அழிக்க அரசால் முடியாது. அவை கடித்தால் பரவும் வெறிநாய்க்கடி (ரேபிஸ்) நோயிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையே அரசால் எடுக்க முடியும் என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் கிராமங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களைத் தவிர, தெருக்களில் திரியும் நாய்களால் மக்களுக்கும், குழந்தைகளுக்கும் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
நகர்ப்புறங்களில் ஒவ்வொரு தெருவிலும் சராசரியாக 25 தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைவதாக இல்லை. தெருக்களில் நடந்து செல்லும் குழந்தைகள் இவற்றைக் கண்டு பயந்து ஓடுவது தொடர்ந்த வண்ணம் உள்ளது.
குழந்தைகளின் பெற்றோருக்கும் இது பெரிய அச்சமாகவே உள்ளது. ஆனால் நாய்த் தொல்லையை தீர்க்க தங்களால் எதுவும் செய்ய முடியாது என்று உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெருவில் திரியும் ஒரு நாயை உள்ளாட்சித் துறை ஊழியர்கள் பிடித்தால் அதற்கு கருத்தடை சிகிச்சை செய்து வெறிநாய் தடுப்பூசி போட்டு ஒரு வாரம் வரை வைத்திருக்க மட்டுமே அனுமதி உண்டு. பின்பு அந்த நாயை, பிடித்த இடத்திலேயேவிட்டுவிட வேண்டும்.
ஒரு நாயைப் பிடித்து தடுப்பூசி போட்டு, கருத்தடை சிகிச்சை செய்வதற்கு ரூ.445 செலவாகும். தினம் 10 நாய்கள் பிடித்தால் ரூ.4,450 செலவு. இந்தக் கணக்கில் பார்த்தால் அலுவலர்களுக்கு சம்பளம் தருவதற்குப் பணம் இல்லாமல் போய்விடும் என்பதால் நாய் பிடிப்பதில் உள்ளாட்சி நிர்வாகங்கள் அக்கறை காட்டுவதில்லை.
கருத்தடை சிகிச்சை செய்தால் மட்டும் அந்த நாய் கடிக்காதா, குழந்தைகளுக்கு அச்சுறுத்தலாக இருக்காதா என்ற கேள்விக்கு பதில் இல்லை.
அந்த நாய் கடித்தால் வெறிநாய்க்கடி பாதிப்பு வராது என்பதற்கு மட்டுமே உள்ளாட்சித் துறை அதிகாரிகள் உத்தரவாதம் தருகின்றனர்.
மற்றபடி நாய்கள் விரட்டுவதால் குழந்தைகள் ஓடி கீழே விழுந்தாலோ, பெரியவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து காயம் ஏற்பட்டாலோ அதற்கு யாரும் பொறுப்பு கிடையாது.
நாய்களைக் கொல்லக் கூடாது என்று பிராணிகள் நல வாரியத்தினர் கூறுவதன் காரணமாகவே அவற்றைக் கொல்லாமல் பழைய இடத்திலேயே விடுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வாழும் தெருக்களில் மட்டும் நாய்கள் ஏதும் இல்லாமல் இருப்பதன் பின்னணி பற்றி இந்த அதிகாரிகள் விளக்கம் தர தயங்குகின்றனர்.
பிராணிகள் மீது அக்கறை இருந்தால் அரசே இந்த நாய்களை ஊருக்கு வெளியே ஒரு இடத்தில் பராமரித்து, மேற்கொண்டு இனப்பெருக்கம் செய்யாமல் தடுத்து, அவை இறந்தவுடன் அப்புறப்படுத்தலாம்.
சில ஆண்டுகளில் இந்த நாய்கள் இறந்தபிறகு இத்தகைய பராமரிப்பு நிலையங்களை மூடிவிடலாம் என்று பொது மக்கள் கருத்து கூறுகின்றனர்.
பசுக்கள் கொல்லப்படுவதைத் தடுக்க பசு பராமரிப்பு வளாகங்கள் இருப்பது போல நாய்களுக்கும் ஏற்பாடு செய்யலாமே தவிர, நாய்களை தெருக்களில் இருந்து அப்புறப்படுத்த மாட்டோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயம் என ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் என்பது மக்களின் கருத்தாக உள்ளது.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு இதற்கான விதிகளில் உரிய திருத்தங்கள் செய்து, தெரு நாய்களை நிரந்தரமாக அகற்ற உள்ளாட்சித் துறை நிர்வாகம் நடவடிக்கை என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பம்.