பெருந்துறை, கருமாண்டிசெல்லிப்பாளையம் பேரூராட்சிகளை இணைத்து புதிய நகராட்சி
பெருந்துறை, கருமாண்டி செல்லிப்பாளையம் பேரூராட்சிகளை இணைத்து புதிய நகராட்சியை உருவாக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
இக்கட்சியின் ஒன்றிய அளவிலான ஆலோசனைக் கூட்டம் பெருந்துறையில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் டி.என்.ஆறுமுகம் தலைமை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் பி.ஜி.மோகன்குமார், கோட்ட அமைப்பு செயலர் எஸ்.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: பெருந்துறை பேரூராட்சியில் ரூ.54 கோடியில் பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
கருமாண்டிசெல்லிப்பாளையம், பெருந்துறை பேரூராட்சி ஆகியவை இணைந்து தான் பெருந்துறை நகரமாக உள்ளது. எனவே, இவை இரண்டையும் இணைத்து புதிய நகராட்சியை உருவாக்க வேண்டும். இரண்டு பேரூராட்சிகளிலும் ஒரே நேரத்தில் கூட்டு பாதாளச் சாக்கடை திட்டமாக செயல்படுத்தினால் கழிவு நீரை வெளியேற்ற எளிதாக இருக்கும்.
விஜய தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும் வகையிலும் பெருந்துறை ஒன்றியப் பகுதிகளில் ஏப்.14-ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் கொடியேற்றுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் தீனதயாள் உபத்யாயாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலராக எம்.கோபன், துணைத் தலைவர்களாக சி.டி.பழனிகுரு, கே.கே.மணிகண்டராஜ், செயலர்களாக கே.மாரப்பன், டி.கே.செந்தில்குமார், பொருளாளராக தனசேகரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.