தினமலர் 10.08.2010
பெரும்பள்ளம் ஓடையில் காவிரி நீர் புகும் அபாயம்! மாற்று திட்டம் தேவை
ஈரோடு: காவிரியாற்றின் குறுக்கே வெண்டிபாளையத்தில் மின் நிலையம் கட்டும் பணி முடிவடைந்தால், ஆற்றில் தேங்கும் தண்ணீருக்குள் காசிபாளையம் நகராட்சி குடிநீரேற்று நிலையம் மூழ்கிவிடும். பெரும்பள்ளம் ஓடை வழியே ஆற்று நீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியம் சார்பில் பவானி கட்டளை கதவணை நீர் மின் திட்டம் மூலம் 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுபோல், வெண்டிபாளையம் மற்றும் பாசூரில் காவிரியாற்றின் குறுக்கே 400 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்பது மீட்டர் உயரத்தில் தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் முடிந்த நிலையில், அக்டோபர் மாதத்துக்குள் பணிகளை முடித்து மின் உற்பத்தி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆற்றின் குறுக்கே 18 ஷட்டர்கள் அமைத்து, மின் உற்பத்தி நிலையத்துக்கு ஆற்று நீர் திருப்பி விடப்படுகிறது. மின் உற்பத்தி நிலையத்தில், தலா 15 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் இரண்டு எந்திரங்கள் பொருத்தப்படுகிறது. வாகனப் போக்குவரத்துக்காக 13 மீட்டர் அகலம், 18 மீட்டர் உயரத்தில் பாலமும் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு நகர சாக்கடை நீரை தாங்கி வரும் பெரும்பள்ளம் ஓடை கதவணைக்கு அருகில் காவிரியில் கலக்கிறது. கதவணை பணி முடிந்தால், கருங்கல்பாளையம் காவிரிக்கரை ராகவேந்திரர் கோவில் வரை, ஆண்டு முழுவதும் 33 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது பெரும்பள்ளம் ஓடைக்குள் ஆற்று நீர் உட்புகுந்து, ஈரோடு நகருக்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது.
காசிபாளையம் நகராட்சிக்கான குடிநீரேற்று நிலையமும் கதவணை அருகிலேயே அமைந்துள்ளது. காவிரியில் பம்பிங் செய்யப்படும் தண்ணீர், குழாய் மூலமாக பெரும்பள்ளம் ஓடையை கடந்து கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கதவணையில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது, குடிநீரேற்று நிலையம் முற்றிலும் மூழ்கி விடும். அப்போது, காசிபாளையம் நகராட்சிக்கு குடிநீர் எடுக்க முடியாத நிலை ஏற்படும். 33 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கும் சமயத்தில் பெரும்பள்ளத்துக்கும், காவிரி ஆற்றுக்கும் இடையிலுள்ள விளை நிலங்களும் மூழ்கும்.
சமீபத்தில் கதவணையில் மூன்றடி உயரத்துக்கு காவிரி வெள்ளத்தை தடுத்த போது, பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை நீர் தேங்கி அப்படியே உட்புகுந்து விட்டது. உடன், ஈரோடு மாநகராட்சி மற்றும் காசிபாளையம் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று, பிரச்னையின் தீவிரத்தை கண்டுள்ளனர். அதன்பின், காவிரி வெள்ளம் திறக்கப்பட்டது. மூன்றடி உயரத்துக்கு தடுப்பு ஏற்படுத்திய போதே, இவ்வளவு பிரச்னையெனில், 33 அடி உயரத்துக்கு காவிரியில் தண்ணீர் தேங்கி நின்றால் என்னவாகும்; ஈரோட்டுக்குள் வெள்ளம் புகுந்து விடாதா? இப்பிரச்னையை தீர்க்க குடிநீரேற்று நிலையத்தை பாதுகாப்பான இடத்துக்கு மாற்றியமைக்க வேண்டும். அத்துடன், கதவணையின் முன்பகுதியில் சென்று பெரும்பள்ளம் ஓடை கலக்கும் வகையில் ஓடையை திருப்பி விட வேண்டும். கதவணை பணி வேகமாக நடந்து வரும் நிலையில், இவ்விரு பிரச்னைகளுக்கும் மாற்று ஏற்பாடுகளை செய்யாமல் சம்பந்தப்பட்ட துறையினர் காலம் தாழ்த்தி வருகின்றனர். மின்வாரிய அதிகாரிகளை இது மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. காசிபாளையம் நகராட்சி தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், “”நீரேற்று நிலையத்தை மாற்றி அமைக்க நகராட்சியில் டெண்டர் கோரப்படும். மக்களுக்கு குடிநீர் விநியோகம் ஏதும் பாதிக்காது,” என்றார். பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”பெரும்பள்ளம் ஓடை எங்கள் பராமரிப்பில் உள்ளது. எனினும், கதவணை கட்டப்படும் இடத்தில் ஓடையை மாற்றி அமைப்பதோ அல்லது வேறு ஏதேனும் பணி செய்வதோ மின்வாரியம்தான் பொறுப்பு,” என்றார்.