தினகரன் 30.09.2010
பேரணாம்பட்டு நகராட்சி எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் கவுன்சிலர்கள் கோரிக்கை
பேரணாம்பட்டு,செப்.30: நகராட்சி எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று பேரணாம்பட்டு நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். பேரணாம்பட்டு நகராட்சி கூட்டம் நேற்று அதன் தலைவர் ஆலியார்ஜுபேர்அகமது தலைமையில் நடைபெற்றது. இதில் துணை தலைவர் பெண்ணரசி சிவசத்தியமூர்த்தி, செயல் அலுவலர் ரவிச்சந்திரன், கவுன்சிலர்கள் ஆகில், சித்திக், அப்துல்ஜமீல், சாம்ராஜ், ரூபிநீலமேகன், ஜானகிபீட்டர், மனோஜோசப், சலீம், துரைமுருகன், ஜீபேர் ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேரணாம்பட்டு நகராட்சிக்கு சிறப்பு சாலை வசதி திட்டத்தின் கீழ் நகரில் சாலைகள் அமைத்திட ரூ2 கோடியே 2 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தமைக்காகவும், மூன்றாம் நிலை நகராட்சியிலிருந்து இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தியமைக்காவும் தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் அப்துல்ஜமீல், மீராஞ்சி சலீம் ஆகியோர் பேரணாம்பட்டு நகராட்சி இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயாத்தப்பட்டுள்ளதால் நிர்வாக வசதிக்காக நகராட்சி எல்லையை விரிவுபடுத்த வேண்டும் என்று கோரினர். இதற்கு தலைவர் ஆலியார் ஜுபேர் அகமது பதிலளிக்கையில் இது குறித்து நகராட்சியில் சிறப்பு கூட்டம் நடத்தி அனைவரின் கருத்துக்களை கேட்டறிந்து தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.