தினகரன் 29.09.2010
பேரூராட்சி தலைவர் பதவியேற்பு
அன்னூர், செப்.29: எஸ்.எஸ் குளம் பேரூராட்சி தலைவர் வெற்றிசெல்வி மற்றும் துணை தலைவர் கந்தசாமி உள்ளிட்ட 15 வார்டு கவுன்சிலர்கள் பதவி வகித்து வந்தனர்.
அப்போது திமுக 10, அதிமுக 3, சுயேட்சை 2 என கவுன்சிலர்கள் பலம் இருந்தது. தலைவர் மீது புகார் கூறி 13.7.2009ம் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் துணை தலைவர் கந்தசாமி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். பெரும்பான்மையான கவுன்சிலர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் கடந்த 17.2.2010, வெற்றி செல்வியை டிஸ்மிஸ் செய்து நடவடிக்கை எடுத்தார்.
இதுகுறித்து வெற்றி செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றார். பின்னர் 20.9.2010 வார்டு கவுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்ததுடன் வழக்கையும் வாபஸ் பெற்றார்.
இந்நிலையில் தேர்தல் அதிகாரி மற்றும் செயல் அலுவலர் ஜெகதீசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திமுக 9, இரண்டு சுயேட்சை உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர். 3 அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்தனர்.
இந்நிலையில் புதிய தலைவராக 3வது வார்டை சேர்ந்த கவிதா, துணை தலைவராக கந்தசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ராஜேந்திரன், தேவராஜ், பாலு, குணசேகரன், மணிமேகலை ராசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட கவிதா, ஊரக தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியிடம் பின்னர் நேற்று ஆசி பெற்றார். எஸ்.எஸ் குளம் பேரூராட்சி புதிய தலைவராக 3வது வார்டை சேர்ந்த கவிதா பதவி ஏற்றுக்கொண்டார்.