தினமணி 03.09.2009
பொது இடத்தில் சுவரொட்டி திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது போலீஸில் புகார்
பெங்களூர், செப். 2: பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டியதாக இரு கன்னட திரைப்பட தயாரிப்பாளர்கள் மீது போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி ஆணையராக பரத்லால் மீனா பொறுப்பு ஏற்ற பிறகு நகரை தூய்மையாக வைத்திருக்க நடவடிக்கை எடுத்துவருகிறார். பொது இடங்களில் திரைப்பட மற்றும் விளம்பர சுவரொட்டிகள் ஒட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். ஏற்கெனவே ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் அகற்றப்பட்டு சுவர்கள் வெள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் “செலுவின சிலிபிலி‘ “உல்லாசா உற்சாகா‘ ஆகிய கன்னட திரைப்படங்கள் அண்மையில் திரையிடப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் சுவரொட்டிகள் கெம்பே கெüடா சாலையில் அதிக அளவில் ஒட்டப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறு சுவரொட்டிகள் ஒட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்றிருக்கவில்லை.
எனவே செலுவின சிலிபிலி திரைப்படத் தயாரிப்பாளர் பி.என்.பவன்குமார், உல்லாசா உற்சாகா திரைப்பட தயாரிப்பாளர் தியாகராஜ் ஆகியோர் மீது உப்பார்பேட்டை போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் மாநகராட்சி உதவி செயற் பொறியாளர் பாஸ்கர் இந்தப் புகாரை அளித்துள்ளார். பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டி பொது இடத்தை திரைப்படத் தயாரிப்பாளர்கள் அசுத்தப்படுத்தியுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கும், பெங்களூருக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று புகாரில் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக பொது இடங்களில் அசுத்தப்படுத்துதல் தடுப்புச் சட்டப்படி திரைப்படத் தயாரிப்பாளர் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீஸôர் விசாரணை நடத்தி வருகிறார்கள்