தினமணி 20.02.2010
பொன்னேரிக்கரையில் புதிய பஸ் நிலையம்
காஞ்சிபுரம், பிப். 19: காஞ்சிபுரம் பொன்னேரிக்கரையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும் என்றும்,அதற்காக 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா (படம்) தெரிவித்தார். ÷மாவட்ட ஆட்சியர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெள்ளிக்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
÷காஞ்சிபுரம் நகரை அழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் தமிழக அரசு ரூ.20 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந் நிதியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் நகராட்சியில் புதுப்பாளையம், மண்டபம் தெரு ஆகிய இடங்களில் தார் சாலைகளும், வீரமாகாளியம்மன் தெரு, திருவேகம்பன் தெரு, சங்கூசாபேட்டை தெரு ஆகிய இடங்களில் சிமென்ட் சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. ÷காஞ்சிபுரம் நகரில் நவீன குப்பை தொட்டிகள் வைத்தல் போன்ற பணிகளும் நடைபெற உள்ளன. கச்சபேஸ்வர் நகர் பகுதியில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்கா ரூ.2.50 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் கே.வி.எம். நகரில் ரூ.20 லட்சம் செலவிலும், பல்லவன் நகரில் ரூ.25 லட்சம் செலவிலும், எல்லப்பா நகரில் ரூ.15 லட்சத்திலும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ரூ.80 லட்சம் செலவிலும் நீச்சல் குளம் அமைக்கப்பட உள்ளது. இதுபோல் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
÷பின்னர் நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
வாலாஜாபாத்தில் இருந்து பெங்களூர் செல்லும் வாகனங்கள் காஞ்சிபுரம் பகுதியில் வராமல் செல்வதற்கு பைபாஸ் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக 128 ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது. இதுவரை 39 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. செவிலிமேட்டில் இருந்து கீழ்அம்பி வரை 10 கி.மீ. தொலைவில் இந்த பைபாஸ் சாலை அமைக்கப்படும். காஞ்சிபுரத்தில் புதிய பஸ் நிலையத்துக்கு 20 ஏக்கர் நிலம் பொன்னேரிக் கரைப் பகுதியில் ஒதுக்கப்பட்டுள்ளது. அப் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமையும் என்றார்.