தினமணி 19.04.2010
பொன்னேரிக் கரையில் புதிய பஸ் நிலையம்
காஞ்சிபுரம், ஏப். 18: காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் ஏற்படும் இட நெருக்கடியை சமாளிக்க பொன்னேரிக்கரை பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
÷காஞ்சிபுரம் நகரின் மையப் பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இந்த பஸ் நிலையத்துக்கு பஸ்கள் நகர்ப் பகுதிகளில் வர வேண்டியுள்ளது. இதனால் நகரில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டும் இப் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்குதான் குறைந்துள்ளது.
÷மேலும் சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பஸ்களில் சில, இரவு நேரங்களில் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு வருவது கிடையாது. இதனால் இரவு நேரத்தில் சென்னை, வேலூர், ஒசூர் போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களும் போதிய பஸ் வசதி இல்லாமல் அவதியுறுகின்றனர்.
÷இந்நிலையில் நகருக்கு வெளியில் பொன்னேரிக்கரை பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைந்தால் பஸ்கள் நகருக்குள் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. விரைவில் அமையவுள்ள புறவழிச் சாலை வழியாக பொன்னேரிக்கரை பஸ் நிலையத்துக்கு பஸ்கள் எளிதில் செல்ல முடியும். இதனால் நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
÷மேலும் பொன்னேரிக் கரை பகுதி சென்னை–பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகே அமைந்துள்ளது. இதனால் இந்த நெடுஞ்சாலை வழியாக செல்லும் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலையத்துக்குள் வந்து செல்லும். இதனால் இரவு நேரங்களிலும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகள் கூடுதலாக கிடைக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.
÷இதுகுறித்து நாட்டுப் பற்றாளர் இயக்கத்தின் தலைவர் தமிழினியனின் கூறியது: காஞ்சிபுரத்தை சுற்றி பல்வேறு தொழில் நகரங்கள் உருவாகியுள்ளன. இதனால் காஞ்சிபுரம் பஸ் நிலையத்துக்கு வரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. அரசின் பரிசீலனையில் உள்ள பொன்னேரிக்கரை பஸ் நிலைய திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் செய்யார் பிரியும் சாலையில் இருந்து புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்தையும் துரிதப்படுத்த வேண்டும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க முடியும் என்றார்.
÷பொன்னேரிக் கரை பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணி குறித்து காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் மகாலட்சுமி தேவியிடம் கேட்டபோது அவர் கூறியது:
ஒரு நாளைக்கு 420 பஸ்கள் தற்போதுள்ள பஸ் நிலையத்துக்கு வந்து செல்வது கடினம். எனவே பொன்னேரிக்கரை பகுதியில் பஸ் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பொன்னேரிக் கரை பகுதியில் உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தில் 20 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இங்கு பஸ் நிலையம் அமைப்பது குறித்து நீர்வள ஆதாரத் துறையிடம் கேட்டுள்ளோம். ஆட்சியர் மூலம் அரசுக்கும் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது என்றார்.