தினமலர் 23.03.2010
பொற்றாமரை குளத்தில் நிரந்தரமாக நீர் மாநகராட்சி, கோயில் நிர்வாகம் ஏற்பாடு
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரை குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் நிரப்ப, கோயில் நிர்வாகத்திற்கு இந்து அறநிலையத்துறை அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மழை காலம் தவிர, மற்ற மாதங்களில் பொற்றாமரை குளம் வறண்டு காணப்படுகிறது. பக்தர்கள் புனிதமாக கருதும் பொற்றாமரை குளத்தில், ஆண்டு முழுவதும் தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை இருக்கிறது.இதற்காக மாநகராட்சி ஒரு திட்டத்தை தயாரித்தது.
சிவகங்கை மாவட்டம் மணலூர் வைகை ஆற்றில் இருந்து ஏற்கனவே மதுரைக்கு வரும் குடிநீர் மெயின் குழாயில் பொற்றாமரை குளத்திற்கான தண்ணீரை கொண்டு வருவது; அதை கீழமாரட் வீதியில் உள்ள ஜோசப் பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி, அங்கிருந்து 1.5 கி.மீ., தூரத்திற்கு தனி குழாய் அமைத்து, பொற்றாமரை குளத்தில் தண்ணீர் நிரப்பு என திட்டம் தயாரானது. இதற்கு 46 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது.இந்த செலவில், 20 லட்சம் ரூபாயை இந்து சமய அறநிலையத்துறை ஏற்றுக்கொண்டால் மீதி தொகையை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளலாம் என முடிவாயிற்று.
இத்தகவல், கோயில் நிர்வாகத்திற்கும் தெரிவிக்கப்பட்டது. 20 லட்சம் ரூபாயை அனுமதிக்குமாறு, அறநிலையத்துறைக்கு கோயில் நிர்வாகம் கடிதம் அனுப்பி இருந்தது. தற்போது, இத்தொகையை செலவழிக்குமாறு அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது. இந்த நிதி தவிர, மோட்டார் மின் செலவு உள்பட மற்ற செலவுகளுக்காக, ஒவ்வொரு ஒரு லட்சம் கன அடி நீருக்கும் 3 ஆயிரம் ரூபாய் பராமரிப்பு செலவு வழங்குமாறு கோயில் நிர்வாகத்திடம் மாநகராட்சி கேட்டிருந்தது. இது குறித்தும் கோயில் நிர்வாகம், அறநிலையத்துறையிடம் பேசி வருகிறது. எனவே, இத்திட்டம் விரைவில் நிறைவேறி, பொற்றாமரை குளத்தில் நிரந்தரமாக நீர் நிரம்பும் நேரம் நெருங்குகிறது.