தினமலர் 05.02.2010
பொள்ளாச்சியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: அதிகாரிகள் அதிரடியால் ரோடுகள் ‘பளீச்‘
பொள்ளாச்சி,பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிக டவடிக்கையால் நடக்கக்கூட இடமில்லாத ரோட்டில் மக்கள் நேற்று “ஹாயாக‘ நடந்து செல்ல முடிந்தது குறிப்பாக திரு.வி.க., மார்கெட் பகுதி “பளீச்‘ என உருவம் மாறியது. இதை பார்த்து பொதுமக்கள் நகராட்சி “சபாஷ்‘ கூறி மகிழ்ச்சியடைந்தனர்.பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் பின்பக்கத்தில் திரு.வி.க., மார்க்கெட் உள்ளது. மார்க்கெட்டினுள் நகராட்சி பார்க்கிங் ஸ்டாண்ட் அமைக்கவும், ரோட்டோர பகுதியில் வணிக வளாகம் கட்டவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக திரு.வி.க., மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அதிகாரிகள் திட்டமிட்டனர். இந்த முடிவுக்கு கவுன்சிலர்களும் பச்சைக்கொடி காட்டினர்.
நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் பழனிக்குமார் மற்றும் சர்வே பிரிவு அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் காலை 10.00 மணிக்கு திரு.வி.க., மார்க்கெட் ரோட்டில் உள்ள நாச்சிமுத்து பிரசவ விடுதியில் திரண்டனர். ஆக்கிரமிப்பு அகற்றம் நடப்பதை அறிந்ததும் தள்ளுவண்டி, நடைபாதை கடை வியாபாரிகள் மின்னல் வகத்தில் கடைகளை காலி செய்தனர். இதனால், மக்கள் நடக்கக்கூட இடமில்லாத திரு.வி.க., மார்க்கெட் ரோடு நேற்று காலை நேரத்திலேயே வெறிச்சோடியது. பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் எவ்வித இடையூறும் இல்லாமல் “ஹாயாக‘ சென்றனர். ஆக்கிரமிப்பு கடைகள் ஏதும் இல்லாததால், நகராட்சி அதிகாரிகள் நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகள் மீது கை வைத்தனர். ரோட்டோரத்தில் சர்வே செய்து, மார்க்கிங் செய்யப்பட்ட இடத்திற்கு வெளியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மரப்பலகை, கட்டடங்கள், சிலாப்புகளை அப்புறப்படுத்தினர். மார்க்கெட் நுழைவாயிலில் காய்கறிக்கடைக்காரர்கள் ஏற்படுத்தியிருந்த நிரந்தர ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக் கொண்டனர். இதனால் திரு.வி.க., மார்க்கெட் ரோடு பளீச் என்றானது. ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல் இதேபோன்று பராமரித்தால் ரோடும் சுத்தமாக இருக்கும், போக்குவரத்துக்கும் வசதியாக இருக்கும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.
நடவடிக்கை பாயுமா? ரோட்டோர கடைகளில் நகராட்சி மார்க்கெட் பிரிவில் தினமும் அதிரடி வசூல் செய்கின்றனர். ரோட்டோர கடை வைக்க முறைகேடாக தினக்கட்டணம் நிர்ணயம் செய்கின்றனர் என்பது அதிகாரிகள் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தில் அரசியல் சாயம் பூசி விதிமுறை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆக்கிரமிப்பு செய்வதில் ஆளுங்கட்சியினரின் கோஷ்டி பிரச்னையும், அமைச்சரின் தலையீடும் இருப்பதால் அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.