தினமணி 03.02.2010
பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் வேண்டுகோள்
பொள்ளாச்சி, பிப்.2: நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வரிகளைப் பொதுமக்கள் செலுத்தி ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பைத் தவிர்க்குமாறு, பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் மு.வரதராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை விடுத்த செய்தி:
நகராட்சி எல்லைக்குள் உள்ள குடியிருப்புகளுக்குச் சொத்து வரி மற்றும் குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகைதாரர்கள் உரிம கட்டணம், கடைகளுக்கான லைசென்ஸ் கட்டணத்தை நகராட்சி அலுவலகம், பாலகோபாலபுரம், மகாலிங்கபுரம் வசூல் மையங்களில் பொதுமக்கள் செலுத்தலாம்.
நகரில் சாலை மேம்பாடு, குடிநீர்த் திட்டம் சீராகச் செயல்படவும், மின் விளக்குகள், பொது சுகாதாரப் பணிகளை பராமரிக்கப் பொதுமக்கள் செலுத்தும் வரி மிக அவசியத் தேவையாக உள்ளது.நகராட்சி எல்லைக்குள் காலியிட வரி 1-10-2009 முதல் சதுர அடிக்கு 50 பைசா என நகர்மன்றம் நிர்ணயித்துள்ளது. வரியைச் செலுத்தி ஜப்தி மற்றும் குடிநீர் இணைப்புத் துண்டிப்பைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.