தினமலர் 25.07.2012
பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்ட் நவீனமயமாகிறது :மாற்றுத்திறனாளிகளுக்கும் பல்வேறு வசதி
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள பழைய பஸ் ஸ்டாண்ட் 42.50 லட்சம் ரூபாய் செலவில் முழுமையாக புனரமைக்கப்படுகிறது. இதில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.
பொள்ளாச்சி நகராட்சிக்கு சொந்தமான பழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு திசையிலும், புதிய பஸ் ஸ்டாண்ட் தெற்கு திசையிலும் செயல்பட்டு வருகிறது. பழைய பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் ஏதும் இன்றி பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.கட்டணக்கழிப்பிடம், இலவசக்கழிப்பிடம், கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் பாதை ஆகியவை சிதைத்து அப்படியே வெட்ட வெளியில் கழிவுநீர் வெளியேறி வந்தது. துர்நாற்றம் தாங்க முடியாமல் பஸ் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.
அதே போல் பஸ்கள் நிறுத்துவதற்கு ஏற்படுத்தப்பட்ட டிராக்குகள் மற்றும் “பே’ ஆகியவற்றில் பஸ்ஸை நிறுத்த முடியாமல் டிரைவர்கள் அவதிப்பட்டனர். அதோடு பஸ் “பே’ யில் பஸ்ø\ நிறுத்தாமல் டிராக்கில் பஸ்ø\ வரிசையாக நிறுத்தாமல் ஏடாகூடமாக நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பஸ் ஸ்டாண்டை விட்டு பஸ் வெளியேறுவதில் சிரமம் ஏற்படுகிறது.
இப்பிரச்னைகளை சரிசெய்யவேண்டும் என்று சொல்லி நுகர்வோர் அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் பலமுறை புகார் கடிதத்தையும், கோரிக்கை மனுக்களையும் கொடுத்தனர். அதன் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கு துறையின் அனுமதியை பெற்ற நகராட்சி நிர்வாகம் அதற்கான தீர்மானங்களை நிறைவேற்றி பணிகளை வேகமாக துவக்கியுள்ளது.தற்போது பஸ் ஸ்டாண்டை புனரமைக்கும் பணியை வேகமாக துவக்கியுள்ளது நகராட்சி நிர்வாகம். பஸ் ஸ்டாண்ட் வடிவமைப்பை மாற்றி முழுமையாக மாற்றி அமைக்கப்படுகிறது. இதற்காக பஸ்ஸ்டாண்டிலுள்ள ஒவ்வொரு டிராக்கின் மேல்தளத்தின் உயரத்தை இரண்டரை அடிக்கு உயர்த்தி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
பழைய மேற்கூரைகள் அனைத்தும் அப்புறப்படுத்திவிட்டு ரூ. 6 லட்சம் செலவில் “கேல்வலன்’ என்றழைக்கப்படும் ஷீட்டுகள் மேல்தளத்துக்கு போடப்படுகிறது. இவை மழை, வெயில், பனி, காற்று அனைத்தையும் தாங்கி நிற்கும் என்று சொல்கின்றனர் நகராட்சி அதிகாரிகள்.பஸ் ஸ்டாண்ட் வளாகத்திலுள்ள கட்டண முறை கழிப்பிடமும், இலவச சிறுநீர் கழிப்பிடமும் உள்ளது. ரூ.17.50 லட்சத்தில் இது நவீனப்படுத்தப்படுகிறது. இதன் அருகே மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5 லட்சத்தில் நவீன கழிப்பிடம் அமைக்கப்படுகிறது.
பஸ் ஸ்டாண்ட் முகப்பு அழகுற அமைப்பதற்காக வடிவமைப்பு ( எலிவேசன்) பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ரூ. 24 லட்சம் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பழைய பஸ் ஸ்டாண்டிலுள்ள நான்கு டிராக்குகள் முழுமையாக செப்பனிடப்படுகிறது. முதற்கட்டமாக கோவை டிராக்கில் பணிகள் துவங்கியுள்ளது. இதற்காக மேற்கூரைகள் அப்புறப்படுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தொடர்ந்து பாலக்காடு பஸ்கள் முன்பு நிறுத்தம் செய்யப்பட்டு வந்த டிராக், பழநி டிராக், திருப்பூர் டிராக் ஆகியவை வரிசையாக மாற்றி அமைக்கப்படுகின்றன.இது குறித்து நகராட்சி உதவி பொறியாளர் மேனகா கூறுகையில்,”” பஸ் ஸ்டாண்ட் புனரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அடுத்த மாதம் 31 ம்தேதிக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம். ஆனால் அதற்கு முன்பே பணிகளை இறுதி செய்துவிடுவோம்,” என்றார்.