தினகரன் 02.06.2010
போக்குவரத்துக்கு இடையூறான கொடி கம்பங்கள், டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்படுமா? ஆரணி நகராட்சி கூட்டத்தில் விவாதம்
ஆரணி, ஜூன் 2: போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கட்சி கொடி கம்பங்கள், டிஜிட்டல் பேனர்களை அகற்ற வேண்டும் என்று ஆரணி நகராட்சி கூட்டத்தில் வற்புறத்தப்பட்டது.
ஆரணி நகராட்சி மன்றக் கூட்டம் அதன் தலைவர் சாந்தி லோகநாதன் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் ஆணையாளர், எம்.எல்.ஏ., ஆர்.சிவானந்தம் மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
ஆ.ந.ரமேஷ்: கோடைக்காலத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வறட்சி கால திட்டப் பணிகள் துவங்க வேண்டும். குடிநீருக்காக நகராட்சியில் பணம் செலுத்து பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிறிய வாகனங்களில் குடிநீர் விநியோகம் செய்தால் அனைவரும் பயன்பெறுவார்கள்.
செந்தில்வேல்: காந்தி நகர் பகுதியில் உள்ள நகராட்சி பூங்கா கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக முழுவதுமாக செடி கொடிகள் இல்லாத நிலையில் தரைமட்டமாக உள்ளது. அங்கு பூங்கா அமைத்திட வேண்டும். பூங்கா பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளிக்கட்டிடம் முழுவதும் சேதம் அடைந்து உள்ளது. அதனை புதுப்பிக்க வேண்டும்.
எஸ்.டி.செல்வம்: நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து பூங்காக்களையும் சீரமைத்து பூங்காக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சூரிய குளத்தில் கழிவுநீர் கலந்து சுகாதார சீர்கேடு உள்ளது. குளத்து நீரை வெளியேற்றி சீரமைக்க வேண்டும்.
எஸ்.கே.ரத்தினகுமார்: நகரில் உள்ள பிரதான போக்குவரத்து சாலைகளில் டிஜிட்டல் பேனர்கள் வியாபார நிறுவனங்களின் பெயர் பலகைகளை மறைத்தும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் வைக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் பேனர்களை முறைப்படுத்திட வேண்டும்.
உடனே எம்.எல்.ஏ. சிவானந்தம் குறுக்கிட்டு கூட்டத்தில் கலந்துகொண்ட சப்&இன்ஸ்பெக்டர் காண்டீபனிடம் சாலைகளில் உள்ள கட்சி கொடி கம்பங்களை அகற்ற வேண்டும். டிஜிட்டல் பேனர்களை வைப்பதற்கான இடங்களை குறிப்பிட்டும் அதற்கான விதிமுறைகளை ஏற்படுத்தி தெரிவிக்க வேண்டும். அதற்காக உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.