தினகரன் 28.08.2012
போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க நெல்லையில் ‘ரிங்ரோடு’ திட்டம் மாநகராட்சி புதிய கமிஷனர் தகவல்
நெல்லை, : நெல்லையில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க ரிங் ரோடு திட்டம் நிறைவேற்றப்படும் என்று மாநகராட்சி புதிய கமிஷனர் தெரிவித்தார்.
நெல்லை மாநகராட்சி கமிஷனர் பொறுப்பு வகித்த மோகன் மீண்டும் நகராட்சிகளின் மண்டல இயக் குனராக நியமிக்கப்பட்டார். மாநகராட்சி புதிய கமிஷனராக சீனி அஜ்மல்கான் நேற்று பொறுப்பேற்றார்.ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இவர், முனிசிபல் கமிஷனர் சர்வீஸ் படிப்பு முடித்து, 1992ல் குளச்சல் நகராட்சி கமிஷனராக பொறுப்பேற்றார்.
பின்னர் குற்றாலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, ஊட்டி ஆகிய நகராட்சிகளில் பணியாற்றிய அவர் மதுரையில் நகராட்சி களின் மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தில் முதன்மை தேர்தல் அதிகாரியாகவும் தூத்துக்குடி மாநகராட்சியில் 10 நாட்கள் ஆணையாளராகவும் பணியாற்றினார். பின்னர் வேலூரில் ஒன்றரை ஆண்டுகள் மாநகராட்சி ஆணையராக பணியாற்றி தற்போது நெல்லை மாநகராட்சியின் புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். அவரிடம் ஆணையர் (பொறுப்பு) மோகன் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
புதிய ஆணையர் சீனி அஜ்மல்கான் நிருபர்களிடம் கூறியதாவது: நெல்லை மாநகராட்சி மற்ற மாநகராட்சிகளோடு போட்டி போடும் வண்ணம் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஆதாரங்களை பெருக்கவும் நடவடிக்கை மேற்கொள்வேன். கொசு ஒழிப்பு, கழிவுநீர் ஓடை சரி செய்தல், குடிநீர் ஆகிய அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்கப்படும். நெல்லையை வெளிநாடுகளில் உள்ள மாநகராட்சி போல் மாற்ற நடவடிக்கை எடுக்கப் படும்.
வரி விதிக்காமல் இருக்கும் கட்டிடங்கள், வரிபாக்கி வசூல் செய்தல், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்து மாநகராட்சிக்கு வருமானத்தை பெருக்குவேன். ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும்.நெல்லையில் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கு மற்ற துறைகளோடு இணைந்து ரிங்ரோடு போன்ற பெரிய திட்டங்கள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.