தினகரன் 13.10.2010
போட்டிக்காக கடுமையாக உழைத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு, கூடுதல் சம்பளம்
புதுடெல்லி, அக். 13: காமன்வெல்த் போட்டி வெற்றிகரமாக நடக்க கடுமையாக உழைத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு பதவி உயர்வு, கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
டெல்லியில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக, விளையாட்டு கிராமம் பற்றி மோசமான கருத்தையே, பல நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அதனால், கிராமத்தையும், போட்டி மைதானங்களையும் சுத்தப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பிறகு, விளையாட்டு கிராமத்தின் நிலை தலைகீழாக மாறி, வெளிநாட்டவரை சூப்பர் என சொல்ல வைத்து விட்டது.
மாநகராட்சி ஊழியர்கள், அதிகாரிகளின் கடுமையான உழைப்புக்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கவுன்சிலர்கள்கூட பாராட்டு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சி தலைவர் ஜே.கே.சர்மா கூறுகையில், “போட்டி வெற்றிகரமாக நடப்பதற்கு மாநகராட்சி ஊழியர்கள் உண்மையிலேயே கடுமையாக உழைத்துள்ளனர். போட்டி பணிக்காக பாடுபட்ட ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு மாத சம்பளம் வழங்குவது பற்றியோ அல்லது போட்டி முடிந்தபிறகு கூடுதலாக விடுமுறை விடுவது பற்றியோ மாநகராட்சி கமிஷனர் ஆலோசிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதுபற்றி மாநகராட்சி அவை முன்னவர் சுபாஷ் ஆர்யா (பா.ஜ.) கூறுகையில் கூறியதாவது: காமன்வெல்த் போட்டிகளுக்காக கஷ்டப்பட்டு பணியாற்றிய ஊழியர்கள், அதிகாரிகளுக்கு ஊக்கப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரைவில் ஆலோசிக்கப்படும். அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் பதவி உயர்வு வழங்கலாமா என்பது பற்றியும் ஆலோசிக்கிறோம். அதுபற்றி முடிவெடுக்க அதிக நாட்களாகும். அதற்கு முன் தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் ஆர்வத்துடன் பணியாற்ற, நிறைவு விழாவுக்கான இலவச பாஸ்களை அவர்களது குடும்பத்தினருக்கு வழங்க வேண்டுமென ஒருங்கிணைப்புக் குழுவை கேட்டுக்கொள்கிறேன். விளையாட்டு கிராமத்தில் மாநகராட்சி ஊழியர்கள் 18ம் தேதி வரையில் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.