தினமலர் 15.04.2010
போராடிய மக்கள் கோரிக்கை ஏற்றுவீட்டு வரி வசூலித்த அலுவலர்கள்
போடி: போடி வலசத்துறை ரோட்டில் பட்டா பெற்று குடியிருந்து வந்த 43 குடும்பத்தினர், தங்களிடம் வீட்டு வரி வசூலிக்க வேண்டும் என போராட் டம் நடத்தினர். நகராட்சி அலுவலர்கள் இவர்களிடம் வீட்டு வரி வசூலித்து ரசீது வழங்கினர்.போடி நகராட்சி முதல் வார்டு வலசத்துறை ரோட்டில் பல ஆண்டுகளாக மண் வீடுகள் கட்டி 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர்.
இவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மின் இணைப்பு பெற வீட்டு வரி செலுத்தியிருக்க வேண்டும். எனவே குடியிருந்து வரும் வீடுகளுக்கு வீட்டு வரி வழங்க பொதுமக்கள் பல முறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. பல ஆண்டுகளாக குடியிருந்து வந்த சிலருக்கு மட்டும் வருவாய்துறை மூலம் பட்டா வழங்கப் பட்டுள்ளன. இதனால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டு வரி வழங்க கோரி இப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இலவச கலர் ‘டிவி‘யை ரோட்டின் முன் பாக வைத்து மின் இணைப்பு பெற நகராட்சி வீட்டு வரி வழங்க வேண்டும் என்ற கோஷத்துடன் கும்மியடித்து போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கையில் இறங்கியது. அப்பகுதியில் பட்டா பெற்று குடியிருக்கும் 43 குடும்பங்களிடம் வீட்டு வரி வசூலித்த நகராட்சி அலுவலர்கள் அதற்கான ரசீது வழங்கினர்.