தினமலர் 08.01.2010
போலியோ சொட்டு மருந்து பேரூராட்சி அறிவுறுத்தல்
அவிநாசி : அவிநாசி பகுதியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தவறாமல் கொடுக்க, பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. பேரூராட்சி தலைவி புஷ்பலதா வெளியிட்ட அறிக்கை: வரும் 10ம் தேதி, மற்றும் பிப்., 7ம் தேதி களில் அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது. ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அவசியம் அளிக்க வேண்டும்.
மஸ்புரம் சத்துணவு மையம், அரசு மருத்துவமனை, செங்காடு திடல் அருகில் பிரேமா பழைய பள்ளி, ரங்கநாதபுரம் விஜயம்மாள் ரங்கசாமி நினைவு பள்ளி, கஸ்தூரிபா வீதி அரசு துவக்க பள்ளி, சீனிவாசபுரம் சர்ச் அருகில் முத்துசெட்டி பாளையம் சத்துணவு மையம், போலீஸ் ஸ்டேஷன் அருகிலுள்ள அரசு துவக்கப்பள்ளி, பழைய, புதிய பஸ்ஸ்டாண்ட், கைகாட்டிபுதூர் சத்துணவு மையம், ராஜன் நகர் உடையார் வீடு ஆகிய இடங்களில் சொட்டு மருந்து வழங்க முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட குழந்தைகளுக்கும் கூடுதல் சொட்டு மருந்து கொடுக்க வேண்டும்; சுகவீனமுள்ள குழந்தைகள், உள்ளூர், வெளியூரிலிருந்து வந்த மற்றும் சென்றுள்ள குழந்தைகள் ஆகியோருக்கு சொட்டு மருந்து அளிக்க வேண்டும். முதல் நாள் சொட்டு மருந்து வழங்கியிருந்தாலும் கூடுதல் தவணை சொட்டு மருந்து வழங்க வேண்டும். இந்த இரு தினங்கள் நடக்கும் முகாம்களில் அவிநாசி பேரூராட்சி பகுதியிலுள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு (0 – 5 வயது) கண்டிப்பாக சொட்டு மருந்து அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.