தினமலர் 17.02.2010
போலி ‘ஆயில்‘ நிறுவனத்துக்கு ‘சீல்‘ : கரூர் கலெக்டர் அதிரடி உத்தரவு
கரூர்: கரூர் அருகே வாகனங்களுக்கான போலி “ஆயில்‘ தயாரித்த நிறுவனத்துக்கு “சீல்‘ வைக்க கலெக்டர் உத்தரவிட்டார்.கரூர் அருகே சுக்காலியூர் பகுதியில் வாகனங்களுக்கான போலி “ஆயில்‘ தயாரிப்பு தொழிற்சாலை ஒன்று இயங்குவதாக கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு வந்த தகவல் அடிப்படையில் கடந்த ஜன., நான்காம் தேதி மாவட்ட வழங்கல் அலுவலர் வெள்ளியங்கிரி தலைமையில் அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர். சுக்காலியூரில் இருந்த நான்கு தொழிற்சாலையில் திறந்திருந்த இரண்டு தொழிற்சாலையில் மட்டும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். மேலாளர் கதிரேசன் மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தொழிற்சாலையில் ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட ஆறு “டிரம்‘களில் இருந்த ஆறாயிரம் லிட்டர் மற்றும் முன்னணி நிறுவனங்களின் பெயர் ஒட்டப்பட்டிருந்த கேன்களில் நிரப்பியிருந்த நாலாயிரம் லிட்டர் “ஆயில்‘ பறிமுதல் செய்யப்பட்டு “சாம்பிள்‘ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. ஆய்வக முடிவில் அவை போலியானவை என்று சான்றளிக்கப்பட்டது.
இதனடிப்படையில் சம்மந்தப்பட்ட “அங்கு ஜெயா டிரேடர்ஸ்‘ நிறுவனத்துக்கு “சீல்‘வைக்க கலெக்டர் உமாமகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார். மாவட்ட வழங்கல் அலுவலர் வெள்ளியங்கிரி, இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ், ஆர்.ஐ., கண்ணன் முன்னிலையில் “அங்கு ஜெயா டிரேடர்ஸ்‘ நிறுவனத்துக்கு “சீல்‘ வைக்கப்பட்டது. உரிமையாளர் கரூர் சின்னாண்டாங்கோவிலை சேர்ந்த ரமேஷ்(31) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கழிவு எண்ணெய் 35 பேரல், இஞ்சின் ஆயில் 25 பேரல், வடிகட்டும் கருவி இரண்டு, கல்மாவு 25 மூட்டை, காலி பேரல் 85 பறிமுதல் செய்யப்பட்டன.