தினமலர் 04.05.2010
போலி கடை உத்தரவுகள் நடமாட்டம் மாநகராட்சி அதிகாரிகள் திகைப்பு
மதுரை: மதுரை மாநகராட்சியில் போலி கடை உத்தரவுகள் ‘நடமாடுவது‘ தெரிய வந்துள்ளது.எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, மதுரை மாநகராட்சியில் பெட்டி கடை வைக்க பலருக்கு உரிமம் தரப்பட்டது. பிற்காலத்தில், இவர்களில் சிலர் இறந்து விட்டனர், சில கடைகள் மூடப்பட்டன. அதன் பிறகு புதிய கடைகளுக்கு உரிமம் தரப்படவில்லை. ஆனால், ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கடைகளை மாற்றலாம் (ஷிப்டிங்) என்ற விதிமுறையைப் பயன்படுத்தி, ஏற்கனவே கடை வைத்திருந்தவர்களின் உரிமத்தைப் பயன்படுத்தி, வேறு இடங்களில் புதிய கடைகளை அமைத்தனர்.ஒரு உரிமத்தின் பெயரில் நாலைந்து கடைகள் கூட நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதை நிரூபிப்பது போல் சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மாதங்களுக்கு முன் மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட ஒரு அறிவிப்பில், ‘அங்கீகாரம் இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘ என எச்சரிக்கப்பட்டது. இதைப் பார்த்து, பழைய குயவர்பாளையம் ரோட்டில் கடை வைத்திருந்த ஒருவர், தனது கடைக்கு அங்கீகாரம் பெறும் நோக்கத்துடன், மாநகராட்சியை அணுகினார். ”கடைக்கு நிலுவை வாடகையை செலுத்தப் போவதாக” கூறி, கடை நடத்துவதற்கான உத்தரவு நகலை காண்பித்தார்.அவரது ‘நேர்மை‘யைப் பார்த்து வியந்த மாநகராட்சி அதிகாரிகள், சம்மந்தப்பட்ட துறைக்கு அவரது உத்தரவு நகலை அனுப்பினர். அங்கு அக்கடிதத்தை சரி பார்த்தபோது தான், அது போலி உத்தரவு என்று தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். ஒரு அதிகாரி கூறுகையில், ”மாநகராட்சியில் இது போல் போலி உத்தரவை பயன்படுத்தி 15 கடைகள் வைக்கப்பட்டிருக்கும் என சந்தேகிக்கிறோம். அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.