தினமலர் 13.01.2010
போலி டீத்தூள் தொழிற்சாலை மாடர்ன் ரைஸ் மில்லுக்கு ‘சீல்‘
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தனியார் மாடர்ன் ரைஸ் மில்லில் செயல்பட்ட போலி கலப்பட டீத்தூள் தொழிற்சாலையை சுகாதார துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், போலி கலப்பட டீத்தூள் தொழிற்சாலை செயல்படுவதாக, சுகாதார துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், வட்டார மருத்துவ அலுவலர் ரவிக்குமார், சுகாதார மேற்பார்வையாளர் கலியபெருமாள் உள்ளிட்ட அதிகாரிகள் விக்கிரவாண்டி எஸ்.ஆர்.மாடர்ன் ரைஸ் மில் வளாகத்தில் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் ராஜாமுகமது என்பவருக்கு சொந்தமான ரைஸ்மில்லின் ஒரு பகுதியில் போலி கலப்பட டீத்தூள் தயாரிப்பு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் வருவதை பார்த்த தொழிலாளர்கள் தப்பி ஓடினர்.
நெல் களத்தில் புளியங் கொட்டை, முந்திரி கொட்டை, மண், உமி கலந்த கலவை பவுடரை உலர வைத்திருந்தததை கண்டு அதிகாரிகள் அதிர்ந்தனர். அங்கு சிறிய மெஷினில் கலப்பட தூளை அரைத்து தரம் பிரித்து மூட்டைகளில் பிடிக்கப்பட்டு, அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. கலப்பட டீத்தூள் தயாரிக்க தேவையான மூலப் பொருட்களான புளியங்� காட்டை மாவு, முந்திரி கொட்டை மாவு, பாலி புரோபிலின் கெமிக்கல், உளுந்து தோல், கலர் மண் ஆகியவைகள் கொண்ட மூட்டை 104ம் போலி டீத்தூள் தயாரித்த மூட்டை 13ம் பறிமுதல் செய்யப்பட்டன. பின் சுகாதாரத் துறையினர் மாடர்ன் ரைஸ் மில்லிற்கு சீல் வைத்தனர். போலி டீத்தூள் தொழிற்சாலையை விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி., தட்சிணாமூர்த்தி பார்வையிட்டார். கலப்பட டீத்தூள் சேலம்,கரூர், சென்னை, திருச்சி போன்ற பகுதிகளுக்கு சப்ளை செய்த ஆதாரங்களை டி.எஸ்.பி., கைப்பற்றினர் . இதன் மூலப்பொருட்கள் பண்ருட்டி பகுதிகளிலிருந்து வர வழைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.