தினமணி 23.02.2010
போலி டீத்தூள் பறிமுதல்
திண்டிவனம் பிப் 22: திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரத் துறையினர் திங்கள்கிழமை கடைகளில் திடீர் சோதனை செய்து விற்பனை செய்து வரும் போலி டீத்தூள்களை பறிமுதல் செய்தனர். திண்டிவனம் சுகாதார ஆய்வாளர்கள் ஜோதிபாசு, சரவணன் உள்ளிட்டோர் நகரில் உள்ள 24 கடைகளில் டீத்தூள் விற்பனை குறித்து சோதனை நடத்தினர். இதில் 13 கிலோ போலியான டீத்தூள் விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஒலக்கூர் வட்டார மருத்துவர் சாந்தி தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் பரமசிவம், மனோகரன் உள்ளிட்டோர் பட்டணம் கிராமத்தில் ஆனந்தனின் வீட்டில் சோதனை செய்து, அங்கு பதுக்கி வைத்திருந்த 25 கிலோ போலி டீத்தூள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.