தினமலர் 24.02.2010
போலி டீ தூள் உபயோகமா?டீக்கடைகளில் ‘திடீர்‘ ஆய்வு:சேத்துப்பட்டில் பரபரப்பு
சேத்துப்பட்டு:சேத்துப்பட்டில் போலி டீ தூள் பயன்படுத்தப்படுகிறதா? என்று டீ கடைகளில் சுகாதார ஊழியர்கள் திடீர் ஆய்வு செய்தனர்.சேத்துப்பட்டு பேரூராட்சியில் 25க்கும் அதிகமான டீக்கடைகள் உள்ளன. இதில் பல கடைகள், சுகாதாரம் இன்றி கழிவுநீர் கால்வாய்கள் ஓரமாக வைத்துள்ளனர். டீ கடையின் கழிவு நீரை நடுரோட்டிலேயே ஊற்றுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்கள் கழிவுநீரை மிதித்துக்கொண்டு தான் செல்ல வேண்டியுள்ளது. பால் காய்ச்சும் பாத்திரங்களை மூடுவதே கிடையாது. இதில் ரோட்டில் பறக்கும் தூசிகள் எல்லாம் விழுந்து கிடக்கும். இந்த பாலில் இருந்துதான் வாடிக்கையாளர்களுக்கு டீ தயாரித்து கொடுப்பார்கள். பொதுமக்களும் இதையே வாங்கி குடிக்கும் அவல நிலை காணப்படுகிறது.இதற்கிடையே, சேத்துப்பட்டு டீக்கடைகளில் புளியங்கொட்டை, மரத்தூள் கலந்த போலி டீ தூள் பயன்படுத்தி, டீ தயாரிப்பதாக மாவட்ட சுகாதார துறையினருக்கு பொதுமக்கள் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் சித்ரா உத்தரவின் பேரில், சேத்துப்பட்டு வட்டார மருத்துவ அலுவலர் கீர்த்தி தலைமையில் வட்டார மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள் அன்பரசன், அந்தோணிராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் சேத்துப்பட்டு பேரூராட்சியில் உள்ள டீக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது டீ தூள் மாதிரிகளை சேகரித்து, சென்னை கிண்டியில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.ஐ.எஸ்.ஐ. தரம் இல்லாமல், போலி டீ தூள் தான் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார துறையினர் தெரிவித்தனர்.டீக்கடைகளில் சுகாதார துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் சேத்துப்பட்டில் பரபரப்பு ஏற்பட்டது.