தினமணி 26.11.2010
போலீஸ் பாதுகாப்புடன் மழை நீரை வெளியேற்றிய அதிகாரிகள்
ராமநாதபுரம், நவ. 25: ராமநாதபுரத்திலிருந்து, கீழக்கரை செல்லும் சாலையில் பசும்பொன் நகர் பகுதியில் தகுந்த போலீஸ் பாதுகாப்புடன் நகராட்சி அதிகாரிகள் துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடன் தேங்கிய மழைநீரை கால்வாய் மூலமாக வியாழக்கிழமை வெளியேற்றினர்.
ராமநாதபுரத்தில், புளிக்காரத் தெரு, சின்னக்கடைத் தெரு,நாகநாதபுரம்,சிவஞானபுரம்,கண்ணன் கோயில் தெரு,குமரய்யா கோயில் பகுதி ஆகியனவற்றில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் புகுந்தது.
புதிய பஸ் நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி நீச்சல் குளம் போலக்காணப்படுகிறது. நகரிலுள்ள துணை மின்நிலைய வளாகத்தில் மின்மாற்றிகள் இருக்கும் இடத்திலும் மழைநீர் தேங்கி அந்நீரை மின்வாரிய ஊழியர்கள் ஜெனரேட்டர் மூலமாக கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களின் வழியாக செல்லுமாறு செய்தனர்.
நகரில் மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் சூழ்ந்து விட்டதால் அப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று அதனை ராமநாதபுரத்திலிருந்து, கீழக்கரை செல்லும் சாலையில் பசும்பொன் நகர் பகுதியில் உள்ள ஷட்டர் மூலமாக திறந்து சக்கரக்கோட்டை கண்மாய்க்கு அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கு பசும்பொன் நகரில் ஒரு சிலர் தங்களுக்குப் பாதிப்பு வந்து விடும் என அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஷட்டரை திறந்து பசும்பொன் நகர் கால்வாய்கள் வழியாக நகராட்சி துப்புரவுப் பணியாளர்களின் உதவியுடனும் ஜெ.சி.பி.மூலமாகவும் அத்தண்ணீரை சக்கரக்கோட்டை கண்மாயக்கு சென்று கடலில் கலக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்தனர்.
ஆட்சியர் உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் முஜ்புர் ரகுமான்,வட்டாட்சியர் ரவிச்சந்திரன், துணை வட்டாட்சியர் செய்யது,வருவாய் ஆய்வாளர் தமீம்,போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கணேசன்,சுபக்குமார்,நகராட்சி சுகாதார அலுவலர் சந்திரன் ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.