தினமலர் 16.02.2010
மக்களிடம் நேரடி குறை கேட்பு மாநகராட்சி மேயர் திடீர் அதிரடி
சேலம்: சேலம் மாநகராட்சியில் நேற்று மக்கள் குறைகளை மேயர் கேட்டறிந்தார். தமிழகத்தில் சேலம் மாநகராட்சியில் மட்டுமே, வாரந்தோறும் திங்கள் கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மேயர் அல்லது கமிஷனர் மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர். உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. அதையடுத்து, திங்கள்தோறும் ஏராளமான கோரிக்கை மனுக்கள் குவிந்தன. கடந்த ஓராண்டாக, மேயர், கமிஷனர் ஆகியோர் மக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறுவதை நிறுத்தினர். மக்களும் மாநகராட்சிக்கு செல்வதை நிறுத்திவிட்டனர். திங்கள் கிழமைகளில் மாநகராட்சி வளாகம் வெறிச்சோடி காணப்படும். இந்நிலையில், மேயர் ரேகா பிரியதர்ஷிணி நேற்று திடீரென மக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றுக் கொண்டு, “உரிய நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று உறுதியளித்தார்.
சாலைகள், சாக்கடை வசதிக்கோரி வந்த மனுக்களுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மொபைல் ஃபோன் மூலம் விளக்கம் கேட்டார். விரைவில் வேலைகளை முடிக்க உத்தரவிட்டார். இதைக்கண்டு மகிழ்ச்சியடைந்த மக்கள், “வாரந்தோறும் மேயர் குறைகளை கேட்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.